(ரக்ஸனா)
பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் அனைத்து விதமான வன்முறைகளையும் இல்லாதொழிக்கும் வேலைத் திட்டத்தின் முன்னாயத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் திருகோணணமலை மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்தில் வெள்ளிக்கிழமையன்று 16.12.2022 மாவட்டச் செயலாளர் டி.எச்.என் ஜயவிக்கிரம தலைமையில் இச் செயல்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன பிராமனகே, பிரதான பொலிஸ் ரிசோதகர் எம்.என். ரஞ்ஜித் விஜேசூரிய தலைமையக பொலிஸ் அதிகாரி லக்ஸ்மன் வெலித்தரகே உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய மகளிர் சிறுவர் பிரிவு மாவட்ட அதிகாரி ஏ.எம். ஸ்வர்ணா தீபானி, பொலிஸ் பாதுகாப்புப் படை அதிகாரிகள் திருகோணமலை அரசம ற்றும் தனியார் பொதுப் போக்குவரத்துச் சேவையிலீடுபடும் சாரதிகள் நடத்துநர்கள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் போதைப் பொருள் விநியோகம் ஆகியவை இடம்பெறும்பொழுது அதுபற்றி பொதுமக்கள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் இலகு வழிமுறையிலமைந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களிலும் ஒட்டப்பட்டன.
அங்கு உரையாற்றிய மாவட்டச் செயலாளர் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் நாடு பூராகவும் நடக்கும் வன்முறைகளகை; குறைப்பதற்கான முன்னோடித் திட்டமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொலிஸாரும் மற்றைய பொதுப்போக்குவரத்து ஊழியர்களும் மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்யும்போது வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவ வேண்டும். பொதுப் போக்குவரத்தச் சேவையில் ஈடுபடுகின்ற ஒரு சாரதி நடத்துநரால் ஒரு பயணியின் நடத்தையை ஊகிக்க முடியும். போதைப் பொருட்கள் பள்ளிக் கூடங்கள் வரை பரவி விட்டன. அதன் விநியோக மார்க்கத்தைத் தடுக்க வேண்டும். இலங்ககையிலே சிறந்த மாவட்டம் திருகோணமலை என்ற பெயரை எடுக்க வேண்டும். பொலிஸாருக்கு தெரியப்படுத்தும் வழிமுறைகள் முக்கியம் என்று வலியுறுத்தியதோடு இந்த விடயத்தில் அனைவரும் ஒருமித்த அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இச்செயல் திட்டத்தை அமுல்படுத்துகிறது.