புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டி, 8 கட்சிகளுடன் பேச்சு என்கின்றது ஆளும்கட்சி

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்காக 8 கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என குறிப்பிட்ட அவர், இதில் அரசியல் தேவை காணப்படுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று சிந்தித்து அனைவரும் ஒன்றாக செயற்ப்பட வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.