உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியின் 97 ஆவது பயிற்சியை முடித்து வெளியேறும் கெடட் உத்தியோகத்தர்களின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு தெரிவிக்கையில் “உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம் சர்வதேச உலகில் இலங்கையை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும்

நாடு என்ற அடிப்படையில் நாம் உலக வல்லரசுகளிடமிருந்து ஒரு தரப்பாக பிரிந்து நிற்கவில்லை. உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஒரு தீவு நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்

இந்த நாட்டைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. உள்ளக மற்றும் வெளிப்புற தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திறன் உங்களிடம் உள்ளது. உங்களை உள்ளடக்கிய எங்கள் இராணுவத்துக்கு இராணுவ அனுபவம் உள்ளது. மேலும் அவர்களுக்கு சர்வதேச போர் அனுபவம் உள்ளது. ஐ.நா படைகளுடன் இணைந்து மாலி அரசின் நடவடிக்கைகளில் நமது பாதுகாப்புப் படைகளும் பங்கு கொள்கின்றன

அதனால் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு உள்ளது. எனவே, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து, நீங்கள் அனைவரும் வலுவாக முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.