பெரு நாட்டில் இடம்பெறும் கலவரங்களால் இதுவரை 20 பேர் பலி!

பெருவின் அயச்சுச்சோ பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ பதவி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக அங்குள்ள ஐந்து விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்களை ஒடுக்க விமானத் துப்பாக்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை இராணுவம் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் இடம்பெற்ற போராட்டங்களால்  இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாக பெருவின் ஒம்பியூட்ஸ்மன் அலுவலகத்தின் தலைவர் இலியானா ரிவோலர் தெரிவித்துள்ளார்.