சிறந்த ஊடகவியலாளருக்கான “சுப்பிரமணியம் செட்டியார்” விருது பெற்றார் ஊடகவியலாளர் சக்திவேல்

இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை பேரவையுடன் இணந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு கல்கிஸ்ஸ மௌண்ட்லாவின்யா ஹோட்டலில் செவ்வாய்கிழமை(13.12.2022) அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இதில் சிறந்த ஊடகவியலாளருக்கான மக்களின் பிரச்சனைகளை கட்டுரைகள் வடிவில் வெளிக்கொணர்ந்தமைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் “சுப்பிரமணியம் செட்டியார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவரது ஊடக வளர்ச்சி,  எழுத்தாற்றலுக்கு  தொடர்ந்தும், ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், மேற்கொண்டுவரும், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சக ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பலரும், வழங்கிய ஒத்துழைப்பே அவரது வளர்சிக்கும், இவ்விருது பெறுவதற்கும் காரணமாக அமைந்ததாகவும், அனைவருக்கும் மிகக் கௌரவமான நன்றிகளையும், தெரிவித்துக் கொள்வதாக இதன்போது விருது பெற்ற ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தெரிவித்தார்.

சமூக சேவை செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல்  இதற்கு முன்னரும், பிரதேச மட்டம் முதல் தேசியமட்டம் வரையில் பலவிருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது இலங்கையின் ஊடகவியல் துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து கௌரவிக்கும் நிகழ்வு இம்முறை 23 வது தடவையாகவும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.