வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் – மக்களை வீடுகளில் இருக்குமாறு எச்சரிக்கை

வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியா ஊடாக நாட்டிற்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பில் உள்ள தூசி துகள் அளவு (US AQI) நேற்றுகாலை 166 ஆக உயர்ந்துள்ளது. அந்த மதிப்பு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, அது ஒரு ஆரோக்கியமற்ற நிலையாகும். நேற்று முன்தினம் இந்த மதிப்பு 126 ஆக காட்டப்பட்டது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் படி, தூசி துகள்கள் உட்பட பாதகமான காற்றின் தர அளவுகளுக்கமைய, கண்டி நகரில் 137 ஆகவும், கேகாலை நகரில் 134 ஆகவும், குருநாகலில் 134 ஆகவும், பதுளையில் 114 ஆகவும், புத்தளத்தில் 109 ஆகவும் அதிகரித்துள்ளது.

உணர்திறன் மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் என்பதனால் முடிந்த அளவு வீடுகளிலேயே இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.

காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எகுறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு நகரில் வாழும், குறைந்த வருமானம்கொண்ட மற்றும் கூலித்தொழிலில் ஈடுபடுவர்களின் வாழ்வில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.