மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளை பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகளை சுய தொழில் முயற்சியை நோக்கி ஊக்கப்படுத்துவதற்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது கோறளை பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் கிரான் பல் நோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது.
முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர் திருமதி.தாரணி கணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் பிரதேச மட்டத்தில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதையும் அதிலிருந்து பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை வியாபாரம் செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் வியாபார பதிவினை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது தொடர்பாகவும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந் நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான திருமதி.கோபிரமணன் மற்றும் பி.நிமால்சாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் யுவதிகளை சிறுதொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவற்கான பல்வேறு செயற்திட்டங்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரினால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.