இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வி!

பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இறக்காமம் பிரதேச சபையில் இன்று (13) இடம்பெற்ற சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 6 உறுப்பினர்களும் எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் குறித்த வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்தது.

குறித்த வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நௌபர் மௌலவி, அன்வர், பாஹிமா, பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்த சிறியலதா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த தவிசாளர் ஜெமில் காரியப்பர், நிர்மலா ஆகிய 6 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்த கலிலுர் றஹ்மான், றபாய்டீன், சுலைஹா, சுல்பிகார் மற்றும் முஸ்லிம் காங்கிரஸை சார்ந்த ஆஸிக், நைஸர், முஸ்மி ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சிகளின் கூட்டில் உள்ள இறக்காமம் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையே வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது