புதிய வரிக்கொள்கையை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினை கண்டித்தும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைகழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் இன்று அடையாள முழு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அநீதியான அரசாங்கத்தின் அசாதாரண வரிவிதிப்பு கொள்கை மற்றும் மக்களை அழுத்ததிற்குள்ளாக்கும் வரவு செலவு திட்டத்தினை எதிர்ப்போம் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தின் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

அமைதியான முறையில் இந்தபோராட்டம் நடைபெற்றதுடன் போராட்டம் நிறைவில் தமது கண்டனங்களை தெரிவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

புதிய வரிக்கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி இதற்கான தீர்வொன்றை வழங்காவிட்டால் தொடர்ச்சியான எதிர்ப்பு நடடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவித்தார்.