இன்று இந்து கலாச்சார திணைக்களத்தின் மாபெரும் புத்தக கண்காட்சி ஆரம்பம்!

(வி.ரி. சகாதேவராஜா)

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு மாபெரும் புத்தகக் கண்காட்சியையும் நூல் விற்பனையையும் காரைதீவில் நடத்த இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் இந்த புத்தக கண்காட்சியும் விற்பனையும் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெற இருக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு புத்தகக்கண்காட்சி அங்குரார்ப்பண வைபவம் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் இடம் பெற இருக்கிறது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.டக்ளஸ் , கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் கலந்து கொள்கிறார் .
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அழைப்பு விடுத்துள்ள இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், தவிசாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கொள்வனவு செய்யும் ஆன்மீக கலாசார வரலாற்று நூல்களுக்கு விஷேட விலைக்கழிவு உண்டு.

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி நிகழ்விலும், புத்தக கொள்வனவிலும் இலவசமாக பங்கேற்கலாம் என்று அம்பாறை மாவட்ட இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.

கண்காட்சிக்காக வருவோர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த இல்லம், சுவாமிகளின் அருங்காட்சியகம், விபுல அறிவகம் மற்றும் நவீனத்துவமான மணிமண்டபத்தையும் பார்வையிட முடியும்..

பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள், சனசமுக நிலையங்கள் என்பன விஷேட விலைக்கழிவுடன் நூல்களை கொள்வனவு செய்ய விஷேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (12)திங்கட்கிழமை முதல் புதன்கிழமை(14) வரை தினமும் பாடசாலை மாணவர்கள் வந்து பார்வையிட பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.