ரணில் – தினேஷ் – சுமந்திரன் பேச்சுக்கான பேச்சு – தமிழர் தரப்பு முடிவு எடுத்துரைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை நடத்தினர்.

வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி அழைத்துள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஒட்டி, தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து, நேற்று மூவரும் மந்திராலோசனை நடத்தினர் எனத் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி முன் நகர்த்துவது என்பவை குறித்து – பேச்சுக்கான பேச்சு பற்றி மூவரும் ஆலோசித்தனர் எனத் தெரியவருகின்றது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உத்தேச பேச்சுக்களை ஒட்டிய தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கருத்து நிலைப்பாட்டை நேற்றைய சந்திப்பில் சுமந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எடுத்துரைத்தார் என்றும் தெரிகின்றது.

அரசமைப்புக் கவுன்சிலுக்கு ஏழாவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் பேரினவாதத் தரப்புக்கள் நேற்று (வியானன்று) பகல் எப்படி நடந்து கொண்டன என்பதை சுமந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சுட்டிக்காட்டினார்.

13ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகும் போது, சமாதான முயற்சிகளுக்கு எதிரான தீவிர பேரினவாதக் கருத்துக்கள் இத்தகைய சக்திகளால் நிச்சயம் முன்வைக்கப்படும், அவற்றைப் புறம் ஒதுக்கிவிட்டு, முன்நகரும் அரசியல் தற்றுணிவும் திடசங்கற்பமும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இருந்தால் மட்டுமே இந்த விடயத்தை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியும் என்று சுமந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நேரடியாகவே தெரிவித்தார்.

ஒருபுறம் பேச்சு நடக்கும் அதேசமயம், மறுபுறத்தில் மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்தி, அரசமைப்பு ஏற்பாடுகளில் ஏற்கனவே உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இந்தச் சமரச முயற்சியில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை பிறக்கும் எனச் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியமையை நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதி ஆமோதிக்கும் விதத்தில் செவிமடுத்தார் என்று தெரிகின்றது.

ஜனாதிபதி செயலகத்திலோ – பிரதமர் அலுவலகத்திலோ இந்தச் சந்திப்பு நடக்கவில்லை. மூன்றாம் தரப்புக்குத் தெரியாமல் கொழும்பில் பொதுவான இடம் ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது என்று தெரிகின்றது.

முதலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன சற்றுப் பிந்தி வந்து சந்திப்பில் இணைந்து கொண்டார்.

உத்தேசப் பேச்சு முயற்சியை விரைந்து முன்நகர்த்துவதற்கு எங்கிருந்து அதனை ஆரம்பிப்பது, அதன் பாதை குறித்து அவர்கள் பேசி சில முடிவுகளை எட்டினர் என்றும் ஒரு வட்டாரம் தெரிவித்தது.

வரும் 13 ஆம் திகதி தாம் கூட்டியுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்யலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பின் முடிவில் குறிப்பிட்டார் என்றும் அறியவந்தது.

இந்தப் பேச்சுகளின் விவரத்தை இன்று சுமந்திரன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேரில் விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது