மாண்புடன் கூடிய மாதவிடாய் பற்றிய சர்வதேச மெய்நிகர் மாநாடு

மாண்புடன் கூடிய மாதவிடாய் பற்றிய சர்வதேச மெய்நிகர் மாநாடு தொனிப்பொருள்: ‘சிறுவர் திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் மாண்புடன் கூடிய மாதவிடாய்’ டிசம்பர் 8, 2022 வியாழன் காலை 10.30 முதல் மாலை 6.00 மணி வரை (இலங்கை நேரம்) கொழும்பு, இலங்கை

விழுது அமைப்பும் மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்கு கூட்டணியும் ( GSCDM) ) இணைந்து ‘சிறுவர் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மாண்புடன் கூடிய மாதவிடாய்’ என்ற தலைப்பில் கலப்பு  மாநாட்டை நடத்துகின்றது. இந்த மாநாடு மாதவிடாய் பாரபட்சம் மற்றும் சிறுவர் திருமணங்களுக்குடையிலான தொடர்;பை ஆராயும் மாநாடாக இடம்பெறவுள்ளதுடன், இதில் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இங்கு யாழ் பல்கலைக்கழகத்தின்  மருத்துவபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர் சுரேந்திரகுமாரன்  (Prof. R. Surenthirakumaran MD (Com. Med.), Dean, Faculty of Medicine,)     அவர்கள் பிரதம அதிதியாகவும் பிரதான உரையினை மிலி அதிகாரி  (Mili Adhikari, Director GSCDM America Chapter, Founding Member of GSCDM)     அவர்களும் வழங்கி சிறப்பிக்கவுள்ளனர்.

இலங்கையின் பின்தங்கிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுகாதாரம் பற்றிய சவால்கள் நிறைந்த இந்த காலப்பகுதியில் பெண்களும் சிறுமிகளும்   எதிர்கொள்கின்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை மிகவும் பொருத்தமானதாகும். விழுது அமைப்பும் மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்கு கூட்டணியும உள்ளுர் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு இலங்கையில் மாநாட்டை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தன.

இந்த ஆண்டு 50 இற்;கும் மேற்பட்ட நாடுகள் இந்த டிசம்பர் 8 ஐ ஆதரிக்கின்றன. ஏனெனில் மாண்புடன் கூடிய மாதவிடாய் குறித்த உரையாடல் உலகளாவிய ரீதியில் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. டிசம்பர் 8 ஐ மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான சர்வதேச தினமாக பிரகடனம் செய்வதற்குப்   பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் இத் தினம் 16 நாட்கள் செயற்பாட்டுவாதத்தின் 14ஆவது நாளாக அமைகின்றது. பெண்களுக்கும் சிறுமியருக்கும் எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் செயற்பாட்டுவாதத்தினுள் இத்தினங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. .

மாண்புடன் கூடிய மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் மாதவிடாய் தொடர்பான தடைகள், களங்கம், அவமானம், வெட்கம், துஷ்பிரயோகம், கட்டுப்பாடுகள் மற்றும் வன்முறை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதனைக் குறிக்கின்றது. மாதவிடாய் பாரபட்சம் என்பது பால்நிலை வன்முறையின் ஒரு அம்சமாகும். ஐ.நாவின் பாகுபாட்டின்படி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் நேரடியாக மாதவிடாய் பாரபட்சங்களுடன் தொடர்புறுகின்றன. உடல் ரீதியிலான தாக்குதல், கலாசார கட்டுக்களை மீறுவதால் நடத்தப்படும் உடல் ரீதியிலான வன்முறைகள், பேச்சினூடான துஷ்பிரயோகம், ஒதுக்கி வைத்தல், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தல், கேலி பேசுதல், உணர்வுரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வன்முறைக்குள்ளாக்கப்படல், பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க முயற்சித்தல், பாலியல் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் சிறுமிகளுக்குள்ள கல்விக்கான உரிமையை மறுத்தல், ஆண்களுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் உணவுகளில் சேவைகளில் வளங்களில் முக்கியத்துவம் அளித்தல் என்பன பாரட்சங்களாகவே கருதப்படுகின்றன.

மாதவிடாய் சுகாதாரம், காலநிலை விவகாரம், பலதரப்பட்ட பால்நிலை அடையாளமும் பாலியல் நோக்குநிலையும் உள்ளவர்களின் உரிமைகள், பெருந்தொற்று காலத்தில் மாதவிடாய் ஆகிய விடயங்கள் பற்றி இங்கு உரையாப்படவுள்ளதுடன் இதில் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் கல்வியியலாளர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த மாநாட்டில், மாதவிடாய் சம்பந்தப்பட்ட மற்றும் சிறுவர் திருமணங்களை  இல்லாதொழித்தல் பற்றிய வருங்கால செயற்றிட்டம், அவை தொடர்பான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள், உடல்நலம் மற்றும் பால்நிலை தாக்கங்களின் அடிப்படையில் தொடர்புடைய நிகழ்வுகள் என்பன தொடர்பில் இங்கு ஆராய்பபடுவதுடன், ஏற்பாட்டாளர்கள் இம்மாநாட்டின் ஊடாக மாண்புடன் கூடிய மாதவிடாயை உறுதிப்படுத்துவதற்கான உலகளாவிய முன்னுரிமைகளாக மாதவிடாய் பாரபட்சத்தை அகற்றுவதற்கும் பங்களிக்க விரும்புகின்றனர். சிக்கல்களை அடையாளம் காணும் அதேவேளை, மாநாடு மாண்புடன் கூடிய மாதவிடாயை வென்றெடுப்பதற்கான சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளையும் ஆராயவுள்ளது.

விழுது நிறுவனம் இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகத் திகழ்வதுடன் 2003ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு போரினாற் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காகவும்,  பாதிக்கப்பட்ட பெண்களுக்காவும்  பணியாற்றி வருகின்றது. பங்கேற்பு ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பால்நிலை சமத்துவம், பொருளாதாரம், சமூக நீதி மற்றும் சமத்துவ மேம்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமூக ரீதியாக ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்கும் கொள்கைகளின் கீழ் இந்த நிறுவனம் இயங்குகின்றது.  கொள்கை வகுப்பு பற்றிய உரையாடல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தவும், அத்தகையை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட குழுக்களுடக்கு ஒரு மேடையை வழங்கவும் முயற்சிக்கின்றது. மாண்புடன் கூடிய மாதவிடாய்க்கான உலகளாவிய தெற்குக் கூட்டணி, மாதவிடாயைப் பாதிக்கும் இடத்தில் உள்ள நிறுவன, கட்டமைப்பு, தனி நபர் மற்றும் சமூக அடக்குமுறை அமைப்புகளை அகற்றும் நோக்கத்துடன் செயற்படுகின்றது. பெண்களின் அடிப்படை மற்றும் தவிர்க்க முடியாத மனித உரிமைகள், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுப்பதற்கான முக்கிய வசதிகளை அணுகுவதற்கான முயற்சிகளுக்கு உதவி அளிக்கின்றது. 2020ஆம் ஆண்டு இந்த அமைப்பு மூன்று நாட்கள் சர்வதேச ரீதியில் செயலமர்வினை நடத்தி 12 விடயங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை முன்வைத்திருந்தது. இதன் ஓர் அம்சமாகவே இந்த மாநாடு தொடர்ந்து நடத்தப்படுகின்றது.

இந்த நிகழ்வைப் பின்வரும் இணைய முகவரியில் அணுக முடியும்.

https://us06web.zoom.us/webinar/register/WN_8PEMaz5pSsKjkUJvnJt9OA (Register and Event link), Webinar ID: 826 4766 4679, Passcode: dignifiedm.