அழுத்தங்கள் நிறைந்த இடமாக பாடசாலை?

நவீன உலகத்தில் சிக்கித் தவிர்க்கும் மானிடன், நாளந்தம் பல்வேறு பிரச்சினைகளை குடும்பத்திலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்கின்றான். இதனால் அழுத்தங்களுடனேயே வாழ்க்கையை கடந்து செல்கின்றான். இலங்கை நாட்டினைப் பொறுத்த வரையில், தற்காலம் பொருளாதார நெருக்கடியான சூழல் நிலவுகின்ற காலம். இதனால் நாளாந்தம் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதில் பல்வேறு சிரமங்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதனால் உள அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய பாடசாலைகளும் மகிழ்வற்று இருக்கின்றன என்றே குறிப்பிட முடியும். பாடசாலைகள் எப்போதும் செழிப்பாக இருக்க வேண்டுமே தவிர சிறைச்சாலைகளாக மாறிவிடக்கூடாது. பாடசாலைகள் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமே எதிர்கால உள ஆரோக்கிய சமூகத்தினை உருவாக்க முடியும்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியின் மூலமாக பாடசாலைகளை மலர்ச்சியுள்ளவையாக மாற்ற முடியும். அலுவலகங்களை நிர்வகிப்பது போன்று பாடசாலைகளை நிவர்வகிக்க முடியாது. அலுவலங்கள் கோவைகளோடு வேலை செய்வது, தவறானாலும் மாற்றிக்கொள்ள முடியும். பாடசாலைகள் சிறுவர்களோடு வேலை செய்வது என்பதினால் உள, உடல் ஆரோக்கியம் என்பது இங்கு பணிபுரிகின்றவர்களுக்கு மிகமுக்கியமானது. தற்காலத்தில் பாடசாலைகள் அலுவலகங்களை விட அதிக அறிக்கையினை எழுதிப் பேணும் இடமாக மாறிவருகின்றன. நாளாந்த கூட்டங்களில் கலந்து கொள்வதும், அறிக்கைகளை எழுதுவதுமே ஆசிரியர்களின் பணி எனும் நிலைக்கு ஆசிரியர் சேவை வந்திருக்கின்றது என்றால் பொய்யாகாது?.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமையுள்ள மாணவர் சமூகம் என்பது அப்பாடசாலையை வழிநடத்தும் அதிபரிலேயே தங்கியுள்ளது. அதிபர் என்பவர் தனது நிருவாக திறமையை மாத்திரம் வைத்துக் கொண்டு பாடசாலையை நடத்திவிட முடியாது. நல் மனப்பாங்குள்ள அதிபர் ஒருவரினாலேயே மகிழ்ச்சிகரமான பாடசாலையை நடத்த முடியும். தனது அதிகாரத்தைக் கொண்டு ஆசிரியர்கள் மீது திணிப்பு செய்து, அவர்களை அழுத்தத்திற்கு ஆளாக்குவதினால், அவ்வழுத்தின் வெளிப்பாடுகள் மாணவர்கள் மீது தாக்கத்தினைச் செலுத்தும். இதனால் பாதிப்;பை எதிர்கொள்கின்றவர்கள் மாணவர்களேயாவர்.

ஒரு பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதோ, அதே அளவு முக்கியத்துவம் இணைப்பாட விதானச் செயற்பாட்டிற்கும் கொடுக்க வேண்டும். இலங்கை நாட்டினைப் பொறுத்த வரையில், நாட்டில் ஏற்பட்ட இடர்கள் காரணமாக பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து, ஒரு வருடத்தில் நிறைவுபெற வேண்டிய கற்றல், கற்பித்தல் செயற்பாடு அடுத்தாண்டிற்கும் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனாலும், பொருளாதார நெருக்கடிச்சூழல் காரணமாகவும் பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மிகவாக குறைவடைந்துள்ளன. இதனால் மாணவர்களின் செயற்பாடும் கற்றல், கற்பித்தல் மட்டுமே என்ற எண்ணத்தினை தோற்றுவித்து வருகின்றன. இது மாணவர்களுக்கு அழுத்தமாகவும் அமையும். இதேவேளை பொதுப்பரீட்சைப் பெறுபேறுதான் வாழ்க்கை அல்லது தகுதி என நினைக்கின்ற மனப்பான்மையும், அப்பெறுபேற்றையே அதிகாரத்தில் உள்ளவர்களும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பதினால் ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதனால் மாணவர்களே அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.

பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஆசிரியர்களின் தூண்டுதல் போன்றவற்றினால் மாணவர்களுக்கு மனவிரக்தியை ஏற்படுத்துகின்றது. இவற்றினை இல்லாமல் செய்து மாணவர்களை மனநிலை மாற்றுவதற்கான செயற்பாடுகளாக இணைப்பாடவிதானங்கள் அமைந்துவிடுகின்றன. அவ்வாறான இணைப்பாட விதானங்களை கற்றல், கற்பித்தலுக்கு சமமாக கொண்டு செல்கின்ற போது மாணவர்களின் உளம் மகிழ்ச்சிகரமானதாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வீட்டில் ஏற்படும் பொருளாதார ரீதியான அழுத்தங்களும் பாடசாலைக்கு வருவதன் மூலமாக குறைவடையும்.

பாடசாலைகளை, மாணவர்கள் விரும்பும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர பாடசாலைகளை மாணவர்கள் வெறுக்கும் நிலையை உண்டுபண்ணக்கூடாது. ஒவ்வொரு மாணவர்களும் திறமையானவர்கள் அவர்களின் ஒட்டுமொத்த திறமைகளையும் மூன்று மணிநேர வினாத்தாளினால் சோதித்து விட முடியாது. அவர்களின் திறமைக்கேற்ற களத்தினை உருவாக்கி அதில் சிறப்புச்தேர்;ச்சி அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் விரும்பும் மகிழ்ச்சிகர சூழலை பாடசாலையிகளில் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தமக்கான விருப்ப நிகழ்ச்சிகளை பார்வையிடும் போது அல்லது பங்கேற்கின்ற போது அதில் உள மகிழ்ச்சி கொள்கின்றனர். இதற்கு துணை புரிவது கற்றல், கற்பித்தலுக்கப்பால் அனுபவத்துடனான நிகழ்ச்சிகளும், இணைப்பாட விதானங்களேயாகும். பாடசாலைகளில் தற்போதைக்கு இதுவே தேவையுமாகும். இதற்கேற்ற வாய்ப்புக்களையும், வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.