தற்கொலையை தூண்ட காரணமானவை

இன்றைய தற்கால சூழலில் தற்கொலை செய்வது சர்வசாதாரணமாக சென்றுவிட்டதெனலாம். மட்டக்களப்பு மாவட்டத்திலே அடிக்கடி தற்கொலைகள் நடந்தேறுகின்றன. இவற்றுள் தூக்கில் தொங்குதலே அதிகம் இடம்பெறுவதை நாளாந்த செய்திகளில் காணமுடிகின்றது. இவ்வாறான தற்கொலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபடுகின்றமையை அறியமுடிகின்றது. பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. மனிதர்களாக பிறந்துவிட்டால் நாளாந்தம் அவமானங்களையும், பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டுதான் நகர்ந்து செல்ல வேண்டும். அதைவிடுத்து இதற்கான தீர்வாக தற்கொலை அமைந்துவிடாது. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க,
தற்கொலை செய்வதற்கான வழியை எவ்வாறு கண்டுபிடித்துக்கொள்கின்றனர். இதற்கு துணையாக இருப்பவை எவை என்பது தொடர்பில் ஆராய வேண்டிய தேவையும் உள்ளது. கொட்டாவி போன்றதொரு தொற்றுநோயாக தற்கொலை மாறிவிட்டதோ? என எண்ணத்தோன்றுகின்றது. ஓர் இடத்தில் தற்கொலை நடந்துவிட்டால் அது இடம்பெற்று சிறிது காலத்திற்குள் இன்னும் இரண்டு மூன்று இடங்களில் நடந்தேறுவதை காணலாம். இது சமூக ஆபத்துமிக்கது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் நடந்தேற வேண்டும்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கான களத்தினை அல்லது உபகரணத்தை இன்று காட்டிக்கொடுக்கின்ற அல்லது தூண்டுதலை ஏற்படுத்துகின்றவை தொடர்பிலும் ஆராய வேண்டிய தேவையுமுண்டு. தூண்டுதல் செயற்பாட்டிற்கு ஊடகங்களுக்கும் பங்குண்டு. இன்று ஓர் இடத்தில் தற்கொலை நடந்துவிட்டால் அது நடந்தேறிய விதம், என்ன செய்தார், அதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றையெல்லாம் தெளிவாக எழுதி பிரசுரிக்கின்ற நிலையை ஊடகங்களில் காணமுடிகின்றது. இவற்றுள் சமூக வலைத்தளங்களுக்கு அதிக பங்குண்டு. அவற்றோடு நிறுத்திவிடாது, ஒருவர் தூக்கில் தொங்குவதை அவ்வாறே பிரசுரிக்கின்ற செயல் மோசமானது. இது இன்னும் தூண்டுதலை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.

முன்னெரெல்லாம் தமிழர்களின் பண்பாட்டில் மரண வீடுகளில் சிறுவர்களை எல்லா விடயங்களிலும் தூரத்திலே வைத்துக்கொள்வார்கள். மரணமடைந்தால் மரண அடைந்தமைக்கான காரணங்களை சிறுவர்கள் இருக்கின்ற போது பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களை பார்க்க விடமாட்டார்கள். மரண சடங்குகளில் எவ்விதத்திலும் அருகில் எடுக்கமாட்டார்கள். இவை வழக்காறு, பண்பாடு என்று சொல்லிக்கொண்டாலும், சிறந்த அறிவியல் ரீதியான ஆலோசனை அடங்கி இருக்கின்றது. ஆனால் தற்காலத்தில் ஒரு சிறுவர் மரணமடைந்துவிட்டால், அவர் மரணித்தமைக்கான காரணம் என்ன? எவ்வாறு மரணித்தார்? எங்கு நடைபெற்றது. என்பது தொடர்பில் சிறுவர்கள் மத்தியில் கூறுகின்ற, அவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கருத்துக்களைப் பருமாறுகின்ற, சம்பவ இடங்களை நேரிலே காண்பிக்கின்ற, மாணவர் ஒன்றுகூடலிலே கூறுகின்ற அபத்தமான செயற்பாடுகள் தற்கொலை செய்து கொள்ள நினைபவர்களுக்கான வழியை திறந்து விடுவதாக அமைகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் நடந்தேறுவது இல்லாமல் செய்யப்பட வேண்டும்.
இதே போன்று சினிமாவிலும், சின்னத்திரைகளிலும் இவ்வாறான தற்கொலை முயற்சி செயற்பாடுகள் வெளிப்படையாகவே காட்டப்படுகின்றன. இவை பாதிக்கப்படுகின்றவர்களுக்கு வழியை ஏற்படுத்தி மரணத்தை சம்பவிக்கும் ஏற்;பாட்டை செய்கின்றன.

எனவே ஒவ்வொருவரும் பொறுப்பு வாய்ந்தவர்களாக மாறி, பெறுமதி மிக்க உயிர்களை காக்க ஒன்றிணைய வேண்டும். பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் நாளை எங்கும் மரண ஓலங்கள் கேட்பதை தடுக்க முடியாமல் போய்விடும்.

ப.ப