பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்கவேண்டும் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எ.மன்சூர் தெரிவித்தார்.

(அபு அலா)

மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து வழங்குகின்றபோதுதான் அவர்களின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்று கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் தெரிவித்தார்.

இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் அனுசரனை மற்றும் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை அம்பாள் பாடசாலையில் கல்விகற்கும் தரம் 5 – 11 வரையாயான மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.ருக்ஸாலி ரொனிக்கா தலைமையில் (06) குறித்த பாடசாலையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மைகள், நல்ல மனிதர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் உதவுகின்றது. மாணவர்கள் மனதில் சிறப்பான விழுமியக் கல்வியைப் போதிக்கின்றபோது, அம்மாணவர்கள் அறிவுத்திறனான மனப்பாங்கை வளர்த்துக்கொண்டு சிறந்த ஆளுமையையும் பெறுகின்றார்கள். அதுமாத்திரமன்றி நிறைந்த விழுமியக் கல்வியையும் பெற்று அதன் மூலம் இவ்வுலகை ஆளுகின்றவர்களாகவும் திகழ்வார்கள்.

ஒரு மாணவனுக்கு எந்தளவிற்கு அனுபவக் கல்வி அவசியமோ, அதேயளவிற்கு விழுமியக் கல்வி அவசியம் என்பதனை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். மாணவர்களிடையே விழுமியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களிடையே சிறந்த விழுமியக் கல்வியை போதிக்க முடியும்.

பாடசாலையில் நல்ல மாணவர்களை உருவாக்காவிட்டால், நாட்டில் நல்ல பிரஜைகள் இல்லமால் போய்விடும். அதனால் கலாச்சார சீரழிவு, சமூக ஒற்றுமை, சமூக நீதி என்பன இல்லாதுபோவதுடன், எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்ககூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது போய்விடும்.

இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சிறந்த விழுமியத்துடன் கூடிய நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொறு பெற்றோர், ஆசிரியர் சமூகம் போன்ற அனைவரது கடைமையாகும். அதற்கான பல உதவிகளை காப்போம் தொண்டு நிறுவனம் செய்து வருகின்றது.

குறிப்பாக, வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகின்ற இந்நிறுவனம், இன்னுமின்னும் பல உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கின்றது. அந்நிறுவனத்தின் உதவிகளையும், வளங்களையும் பயன்படுத்தி மாணவச் செல்வங்களின் கல்வியுடன் ஒழுக்கக் கல்வியையும் மேம்படுத்த ஆசிரியர் சமூகம் முன்வரவேண்டும் என்றார்.

மாதுமை அம்பாள் வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி எஸ்.ஆர். ரோஸ்மேரி இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், குறித்த பாடசாலையின் அதிபர் என்.இலங்கேஸ்வரன் உள்ளிட்ட பாடசாலையின் ஆசிரியர்கள், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.