தேசிய இன விகிதாசார அடிப்படையில்காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட சடவடிக்கை – சாணக்கியன் எச்சரிக்கை!

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) விசேட ஒழுங்குப்பிரச்சினையினை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும். ஆனால் 94 சதவீதமான காணிகள் பெரும்பான்மையினருக்கு பிரிக்கப்படுள்ள நிலையில் மிகுதிக் காணிகள் சிறுபான்மை மக்களுக்கு பிரிக்கப்பட வேண்டும்.

மிகுதிக் காணிகள் பகிரப்படாவிடின் இதற்கு எதிரான சட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். அல்லது இதுகுறித்து உங்களுடன் பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினை கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார்.

இந்தநிலையில் தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகளை பிரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுதொடர்பில் அடுத்த வாரம் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.