நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகத்தை நிறுவுவதற்கு தீர்மானம் !

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வரைவுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்து, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் இது தொடர்பான ஆரம்ப சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.