கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருமந்திர அரண்மனைக்கான அடிக்கல் நட்டு வைப்பு

(பெருநிலத்தான்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனைக்கான அடிக்கல் நாட்டு விழா(04) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அடிகல்லினை, சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணமிருந்து வருகை தந்திருந்த அமெரிக்காவின் ஹவாய் தீவினுடைய ஆன்மீக சுடர் ரிஷி தொண்டனாதர் சுவாமி, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வண்ணக்குமார் மற்றும் குடிகளின் அங்கத்தவர்கள், நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து நட்டு வைத்தனர்.

அகில இலங்கை சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் இவ்வரண்மனை அமைக்கப்படவுள்ளது. இங்கு கருங்கல்லில் பொறிக்கப்பட்ட 3000திருமந்திரப்பாடல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 108 சிவலிங்கங்கள் பிரதிஸ்டை செய்யப்படவுள்ளன. மேலும் நடுவில் முகலிங்கம் ஒன்றும் பிரதிஷ்டை பண்ணி அடியவர்களுடைய தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

குறித்த அரண்மனை வேலைகள் நிறைவு பெற்றதும், எதிர்வரும் ஆண்டு(2023) மாசி மாதம் 18ம் திகதி கும்பாவிசேகம் நடைபெறவுள்ளதாகவும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். மேலும், அடியவர்கள் 3000 திருமந்திர பாடல்களையும் அவர்களது வாயால் ஓதி உணர்ந்து வாழ்வதற்கு உரிய வழிகளையும் அவர்கள் வகுத்து கொள்வதுடன் தங்களது கையாலேயே அங்கு அமைய இருக்கின்ற 108 சிவலிங்கங்களுக்கும் அபிஷேகங்களை செய்ய கூடிய பாக்கியமும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.