சீனாவை விமர்சிப்பதற்கு இந்தியாவின் செல்வாக்கு காரணமல்ல – சாணக்கியன்

இலங்கை தொடர்பான சீனாவின் பொருளாதார கொள்கைகளை கூட்டமைப்பு விமர்சிப்பதற்கும் இந்தியாவுடன் அந்த கட்சிக்கு உள்ள உறவுகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியாவின் ஆதரவுதான் காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் மக்கள் விவகாரத்தில் எப்போதும் அனுதாபத்துடன் உள்ள நிலையில் கூட்டமைப்பின் மீதான இந்தியாவின் செல்வாக்கு குறித்த கருத்து இயல்பானதே என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவா, பிரித்தானியாவா, அல்லது அவுஸ்ரேலியாவா என்று இல்லாமல் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களுக்கு எதிராக தானும் தனது கட்சியும் குரல்கொடுக்கும் என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எப்போதும் இந்தியா தமிழ் மக்களுக்கு நண்பனாக இருந்துள்ள போதும் சீனா தமிழ் மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ளவில்லை எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டிற்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இந்தியா ஈடுபட்டால் அவர்களையும் தாம் கண்டிப்போம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.