(த.சுபேசன்)
வட மாகாணத்தில் காடுகளை பாதுகாக்கும் செயற்பாட்டினை விட அதிகமாக மக்களது காணிகளை காடுகளாக்கி அபகரிக்கும் செயற்பாடே இடம்பெறுகின்றது.
02.12.2022 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
தனது உரையில் மேலும் அவர்,
எமது மக்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளில், காணிப்பிரச்சனையும் பிரதானமானது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள் பல திணைக்களங்களால், பல நபர்களால், பல வடிவங்களில் ஒரு நிகழ்ச்சிநிரலில் சூறையாடப்படுகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை தவிர்க்க இலங்கையின் 30% நிலப்பரப்பை கொண்ட வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், உணவு உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை தீர்க்க வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் ஒரு சில தரப்பினருடைய அசமந்த போக்கினால் மாவட்ட, மாகாண, அல்லது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது.
யுத்தம் நடந்த பகுதியாக இருந்தாலும் அழிக்கப்படாத காடுகள் வடக்கில் இன்றும் உள்ளன. அவற்றை பாதுகாப்பதை விட இப்போது மக்களுடைய காணிகளை காடுகளாக மாற்றி காணி பிடிப்பதுதான் இடம்பெறுகிறது.
இவற்றை தீர்க்க நாம் ஆராய்ந்த பொழுது, Google Map / GPS முறையில் காணிகளை அடையாளப்படுத்துவதே தவறு ஏற்பட காரணமென பல கூட்டங்களில் உணரப்பட்டது.
கடந்த காலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மணலாற்றில் நடந்ததை போன்று தற்போதைய வனப்பாதுகாப்பு ரீதியான காணி அபகரிப்புகள் மீதும் மக்களுக்கு அச்சம் உள்ளது. அவை விடுவிக்கப்படும் என காலத்துக்கு காலம் மாறும் அத்தனை அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் சொல்லிக் கொண்டாலும் முழுமையாக தீரவில்லை.
கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரடியாக யாழ் மாவட்டத்துக்கு வருகைதந்த போதும், இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டும், இன்னும் தீர்வுகள் இல்லை. அவற்றை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு நீதிக்கான அணுகல் சந்திப்பின்போதும் எமது வலிவடக்கு, மருதங்கேணி, நெடுந்தீவு, முல்லைத்தீவு பிரதேச செயலாளர்களால் இவ்விடயத்தின் அவசியம் கூறப்பட்டது. துறை சார்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதனை ஏற்று, அதற்கான நிவர்த்தியை செய்ய கால அவகாசம் கோரியும் அரசியல் குழப்ப நிலை அதை மேலும் நீடித்துள்ளது என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது மக்களின் காணிப்பிரச்சனையானது
– உயர் பாதுகாப்பு வலயம்
– விமான நிலைய வலயம்
– வன ஜீவராசிகள் வனப்பாதுகாப்பு திணைக்களம்
– தொல்லியல் திணைக்களம்
ஆகிய பிரதான காரணிகளோடு தொடர்புபடுகிறது.
வலி வடக்கு பிரதேச மக்களின் வாழ்வியல் நிலங்களும், விவசாய நிலங்களும் விடுவிக்கப்படாத நிலை இன்னமும் தொடர்கிறது. யாழ்.மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து , 822 ஏக்கர் காணி பல கட்டங்களில் விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் 3ஆயிரத்து 27 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது.
பாதுகாப்பு தரப்பால் யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வீதிகள்:-
● தெல்லிப்பளை-அச்சுவேலி (கட்டுவன் சந்தி – வசாவிளான் B 437)
● பலாலி வீதி (வசாவிளான் மகாவித்தியாலம்- பலாலி சந்தி AB18)
● KKS-கீரிமலை வீதி (இலங்கை கடற்படை பயன்படுத்தியது AB 21)
● பலாலி வீதி (B 420)
பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் பாடசாலை காணிகள் மற்றும் கட்டிடங்கள்:-
● வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம்,
● மயிலிட்டி RC வித்தியாலயம்
● கேகேஎஸ் மகா வித்தியாலயம்
● கே.கே.எஸ் RC வித்தியாலயம்
● பலாலி சித்திவிநாயகர் வித்தியாசாலை
● பலாலி GTMS பாடசாலை
ஆகியன உள்ளன
இப்படியிருக்க, விடுவிக்கப்படாமல் உள்ள 3ஆயிரத்து 27 ஏக்கர் காணியில் , ஆயிரத்து 617 ஏக்கர் காணியினை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்கு காணி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அரசாங்கம், பிரதேச மக்களின் காணிகளை சுவீகரித்தது. அதியுயர் பாதுகாப்பு வலயமாக இந்த காணிகளை அரசாங்கம் தன்வசம் வைத்துள்ளது.
794 பொதுமக்களுக்கு சொந்தமான 262 ஹெக்டயர் காணிகள் (397 காணித்துண்டுகள்) இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்களின் விபரங்கள், அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் என்பன மாவட்ட செயலகத்தால் பெறப்பட்டு, அவை இணையத்தில் உள்ளன.
அந்த மக்களுக்கான நஸ்டஈடுகள் / பதில் காணிகளை துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதிக பயணிகளை கொண்ட விமானங்களை தரையிறக்க தேவையான ஓடுபாதை விஸ்தரிக்க மேலும் காணிகள் தேவைப்படுகிறது. ஆனால் கடந்தகால நஸ்டஈடுகள் இன்னமும் கொடுக்கப்படாமையால் மக்கள் மத்தியில் அதற்குரிய வரவேற்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இவைதவிர, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் யாழ்ப்பாணத்தில், மருதங்கேணி, நாகர்கோவில், பருத்தி தீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் விடுவிக்க வேண்டியுள்ளது.
மருதங்கேணி – சுண்டிக்குளம் தேசிய பூங்காவுக்கென முள்ளியான், போக்கறுப்பு, சுண்டிக்குளம் பகுதிகளில் 325 காணித்துண்டுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குள் 273 குடும்பங்களின் வீடுகளும் 345 குடும்பங்களின் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட தனியார், பொது அமைப்புகள், அரச அமைப்புகளின் கட்டிடங்கள், குளங்கள், பொதுக்கிணறுகள், மயானங்கள், கோவில்கள் போன்றவையும் உள்ளன
2016இல் நாகர்கோவில் இயற்கை ஒதுக்கம் வர்த்தமானி அறிவிப்பால் பிரகடனம் செய்யப்பட்டது. அதற்குள் அக்கிராமத்திலுள்ள 273 வீடுகள், 08 குளங்கள், 200 ஏக்கர் பயிர்நிலங்கள், 11 ஆலயங்கள், 47 பொது நிறுவனங்கள், 6 மயானங்கள், 1 விளையாட்டு மைதானம் என்பன இதனால் பாதிப்படைந்துள்ளன. அதேபோன்று பாரம்பரிய மீன்பிடியும் பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2015இல் நெடுந்தீவு தேசிய பூங்கா பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் தற்போது தீவின் மூன்றில் ஒரு பகுதி அந்த வலயத்துக்குள் அகப்பட்டுள்ளது. பல குடும்பங்களின் விவசாய மற்றும் தனியார் நிலங்கள் இதற்குள் அடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் தீர்வு கிடைக்க வேண்டும்.
இவற்றோடு வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் கையப்படுத்தப்பட்டுள்ள நிலங்களும் எங்கள் மக்களை விசனமடைய வைத்துள்ளது.
மணற்காடு சவுக்கம் தோப்பில் 702 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதற்குள் 8 தனியார் காணி, 10 பொது நிறுவனங்கள், 2 மீன்பிடி பகுதிகள் போன்றன அகப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக முன்னாள் காணி அமைச்சர் நேரில் வந்து மக்களை சந்தித்து தீர்வு காண்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் தீர்வுகள் இல்லை.
அதேபோன்று 2019இல் சாவகச்சேரி சந்திரபுரத்திலும், சரசாலையிலும் கையப்படுத்தப்பட்ட காணிகளில் சந்திரபுரத்தில் 101.8 ஏக்கர் காணியும், சரசாலையில் 86 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட வேண்டும்
இவற்றுள் வீடுகள், ஆலயங்கள், மயானம், மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் போன்றன உள்ளடங்கியுள்ளன.
இப்படியாக தீர்க்கப்பட வேண்டிய காணி சார்ந்த பிரச்சனைகள் விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். பல அமைச்சர்கள், ஆளுநர்கள், அதிகாரிகள் மாறி மாறி வந்தும் தீராத பிரச்சனைகளாக இவை உள்ளன. ஜனாதிபதி அவர்கள் அண்மையில் வவுனியாவுக்கு வந்திருந்தபோது தெரிவித்த கருத்துகள் நம்பிக்கை தருகின்றன. அவை அதிகாரிகள் மட்டத்திலும் விரைவுபடுத்தப்பட வேண்டும். எங்கள் மக்களின் காணிப்பிரச்சனைக்கு உரிய தீர்வு உடனடியாக எட்டப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சுற்றுலாத்துறை தொடர்பாக உரையாற்றும்போது,
இலங்கையில் கொவிட் நிலைமை காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சியால் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
வட மாகாணத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பல உள்ளன. கடற்கரைகள், தொல்பொருள் இடங்கள், அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் என்பவற்றோடு பல சுற்றுலா இடங்களும் உள்ளன. வட மாகாணத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் அனுபவம் ஏனைய மாகாணங்களை விட வித்தியாசமானது.
எனவே எமது பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்த நான் சில கோரிக்கைகளை இச்சபையில் முன்வைக்கிறேன்.
1. சுற்றுலாத்துறையை மேம்படுத்த, பயிற்சி பெற்றவர்கள் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் ஒரு ஹோட்டல் பாடசாலை உள்ளது, ஆனால் அது ஒரு நோக்கத்திற்காக கட்டப்பட்டதாக இல்லை. அது ஒரு வாடகை கட்டிடத்தில் உள்ளதோடு சில பாடப்பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. வடமாகாண மக்களும் ஹோட்டல் துறையில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பைப் பெற விரும்புகிறார்கள். கொழும்பில் அல்லது கண்டியில் உள்ள பாடசாலைகளைப் போன்று வடமாகாணத்திலும் ஒரு நோக்கத்துடன் கூடிய ஹோட்டல் பாடசாலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்பதே எமது அன்பான வேண்டுகோள்.
2. பலாலியில் உள்ள யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பல பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா எங்களின் முதன்மையான சுற்றுலாப் பயணிகளை உருவாக்கும் நாடு. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஆரம்பம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும். இது முழு நாட்டிற்கும் சுற்றுலாசார் பயனை வழங்கும்.
3. கடந்த காலங்களில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கம் சுற்றுலா வருமானத்தை மேம்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, குறித்த படகு சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.
4. வனவிலங்குசார் சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை தற்போது ஆர்வமாக உள்ளது. காட்டு யானை மற்றும் சிறுத்தைகளை காணக்கூடிய பல இடங்கள் இலங்கையில் உள்ளன. அதேநேரம் இலங்கையில் காட்டு குதிரைகள் இருக்கும் ஒரே இடம் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவாகும். ஆகவே அதற்குரிய திட்டமொன்றை வகுத்து, காட்டு குதிரைகளை தரிசிப்பதற்கான இடமாக நெடுந்தீவை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
5. இலங்கையில் பல பகுதிகளில் சுற்றுலா விடுதிகள் உள்ளன. உதாரணமாக, பென்தோட்ட, பாசிகுடா மற்றும் யால பகுதிகளை குறிப்பிடலாம். கற்பிட்டியில் இத்தகைய விடுதியொன்று அமைக்கப்பட உள்ளது. ஆகவே வடமாகாண சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள உல்லாச விடுதிகளைப் போன்று சுற்றுலா விடுதிகளை அமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
6. ராமர் சேது பாலத்தை பார்வையிடுவதற்காக இந்திய அரசு ராமேஸ்வரத்தில் ஒரு கோபுரத்தை கட்டியுள்ளது. அது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துவரும் ஒரு சுற்றுலாத்தலமாக மாறுகிறது. இந்த ராமர் சேது பாலத்தின் மறுமுனை தலைமன்னாரில் உள்ளது. ராமர் – சேது பாலத்தை மட்டுமின்றி தென்னிந்தியாவின் தென் முனையையும் பார்வையிடுவதற்கு தலைமன்னாரில் ஒரு கோபுரம் தேவையாகும். இது இலங்கையின் உள்நாட்டு சுற்றுலாவை பெரிதளவில் மேம்படுத்தும்.
7. இலங்கையைச் சுற்றியுள்ள தீவுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன.
வடமாகாணத்தை பொறுத்தவரையில் குறிகட்டுவான் படகு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். இதனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தினால், அருகிலுள்ள தீவுகளுக்கு படகு சேவைகளை இயக்க தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அவுஸ்திரேலியாவில் உள்ள படகுத் துறைமுகங்களைப் போல குறிகட்டுவான் படகுத்துறைமுகமும் சுற்றுலாபயணிகளின் வரவேற்பை பெறும்.
ஆகவே எங்கள் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத்துறை வளங்களை சரியாக பயன்படுத்தினால் நாட்டுக்கும் வடமாகாணத்துக்கும் சிறந்த வருமானத்தை உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அவரது உரையைத் தொடர்ந்து உரையாற்றிய சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னான்டோ அவர்கள்,
வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சரியானது. இதற்கான குழுவொன்றை நாம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் ஆரம்பிக்கவுள்ளோம். அதில் பங்கெடுக்குமாறு உங்களை அழைக்கிறேன், என்றார்.
மேலும், பலாலி சர்வதேச விமானநிலையத்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் விமான சேவைகள் ஆரம்பமாகும் என்ற செய்தியையும் அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அமைச்சரை தொடர்ந்து கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன், எமது பிரதேசத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகளில் அமைச்சர் காட்டிவரும் முற்போக்கான செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, வடக்கின் சுற்றுலா அபிவிருத்தியில் தனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.