கொழும்பில் அதிகரிக்கும் சிறுநீரக மோசடி!!

கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு சிறுநீரகங்களைப் பெற்று விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் கொழும்பு மேலதிக நீதவான் ரஞ்சிந்திர ஜயசூரியவிடம் நேற்று அறிவித்திருந்தனர்.

ஒரு பெண் உட்பட ஐந்து பேர் குறித்த சந்தேக நபர்களுக்கு சிறுநீரகத்தை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் ஒவ்வொரு சிறுநீரகத்திற்கும் 15 மில்லியன் ரூபாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர், என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொழும்பு புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவர்களை குறித்த மோசடிக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், மூன்று தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான உண்மைகளை பரிசீலித்த நீதவான், விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.