சீனா கோ ஹோம் பிரசாரமும் தொடங்கப்படும் – சாணக்கியன் எச்சரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் இதன்போது குற்றம் சுமத்தினார்.

தாம் அண்மையில் இது தொடர்பாக நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர் டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளதாகவும் இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.

எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என்று சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

22 மில்லியன் இலங்கையர்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததர்.

மக்கள் கோட்டா கோ ஹோம் பிரசாரத்தை முன்னெடுத்தது போல், சீனா கோ ஹோம் பிரசாரமும் தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தநிலையில் இதற்கு பதில் வழங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, சாணக்கியனுக்கு தமது கருத்தை வெளியிட உரிமையுள்ள போதும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.