சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து இலங்கை மக்களிடம் கணக்கெடுப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் இலங்கையின் 60.5% மக்கள் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 21 முதல் 31 வரை, மாற்றுக்கொள்கை மையம் உள்ளிட்ட பல அரச சாரா நிறுவனங்கள் 25 மாவட்டங்களில் ஆயிரம் பேரின் மாதிரியைப் பயன்படுத்தி இது தொடர்பான கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பில், 60.5% பேர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தங்கள் சம்மதத்தை வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 24% பேர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையில், 56.8 சதவீதம் பேர் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாடு செல்ல அல்லது வேறு நாட்டில் வாழ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 77.2% பேரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.4% பேரும் வெளிநாடு செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.