மாகாண‌ ச‌பைக‌ளை விட மாவ‌ட்ட‌ ச‌பைக‌ளே ம‌க்க‌ளுக்கு இல‌குவில் சேவையை கொண்டு வ‌ரும் : ஐக்கிய காங்கிரஸ்

(நூருல் ஹுதா உமர்)

மாகாண‌ ச‌பைக‌ளுக்கு ப‌திலாக‌ மாவ‌ட்ட‌ ச‌பைக‌ளை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ற‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வின் முய‌ற்சியை பாராட்டுகிறோம். இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வில் எம‌து க‌ட்சி முன் வைத்த‌ தீர்வு திட்ட‌த்திலும் மாகாண‌ ச‌பைகளுக்கு ப‌திலாக‌ மாவ‌ட்ட‌ ச‌பைக‌ளை உருவாக்க‌ வேண்டும் என்ப‌தை வலியுறுத்தியுள்ளோம் என ஐக்கிய காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மாகாண‌ ச‌பை முறை என்ப‌து இன‌ப்பிர‌ச்சினைக்கு தீர்வாக‌ இந்தியாவால் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌ தீர்வாகும். இத‌னை விடுத‌லைப்புலிக‌ள் கூட‌ நிராக‌ரித்திருந்த‌ன‌ர். மாகாண‌ ச‌பைக‌ள் இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை கொண்டு வ‌ருவ‌த‌ற்கு ப‌திலாக‌ இன‌ங்க‌ளுக்கிடையில் குரோத‌ங்க‌ளையும் இன‌ ரீதியிலான‌ அதிகார‌ போட்டியையுமே உருவாக்கியுள்ள‌து. மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளால் ம‌க்க‌ள் ந‌ன்மைக‌ளை பெற‌வில்லை. உறுப்பின‌ர்க‌ளே கோடிக‌ளை பெற்ற‌ன‌ர்.

ஜ‌னாதிப‌தியின் முய‌ற்சியை சில‌ இன‌வாத‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கண்டித்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அதிலிருந்து ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் வில‌கிய‌மை க‌வ‌லைக்குரிய‌து. ஆயினும் மாவ‌ட்ட‌ ச‌பைக‌ளே ம‌க்க‌ளுக்கு இல‌குவில் சேவையை கொண்டு வ‌ரும் என்ப‌தை எதிர்கால‌ம் எமக்கு எடுத்துரைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.