மட்டக்களப்பு வலயப் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

(மட்டு. துஷாரா)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டிகள் வித்தியாலயத்தின் அதிபர் அ.குலேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் 14, 16 மற்றும் 19 வயது பிரிவுகளைச் சேர்ந்த 19 அணிகள் பங்குகொண்ட இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 14 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும், தன்னாமுனை சேன் ஜோசப் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது. 16 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி அணியும், மட்டக்களப்பு விவேகானந்தாக் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது. 19 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும், மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அணிகளின் போட்டிகள் நேற்று (30) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இச்சுற்றில் 14 வயதுப்பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியினர் 3 கோல்களை அடித்து வெற்றிபெற்றது. 16 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி அணியினர் 1 கோலை அடித்து வெற்றிபெற்றது. 19 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியும், மஹஜனக் கல்லூரி அணியும் தலா 1 கோல் வீதம் அடித்து சமாந்திரமாக முடிவுற்ற இப்போட்டிக்கு, பினால்ட்டி முறையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியினர் 2 கோல்களை அடித்து வெற்றிபெற்றது.

இச்சுற்றுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கு.சுஜாதாவும், சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு வெற்றியீட்டிய அணியினர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.