44வலயங்களை முந்தியடித்த மட்டக்களப்பு மேற்கு

(பெருநிலத்தான்) அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அபார உயர்ச்சியைப் பெற்றுள்ளது.
2020ம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வு அடிப்படையில், 100 வலயங்களில் 88வது இடத்தினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், 2021ம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வின் அடிப்படையில் 43வது இடத்தினைப் பெற்றுள்ளது.
17கல்வி வலயங்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில் 7வது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் உருவான குறித்த கல்வி வலயம் நீண்ட காலம் உருவாகிய கல்வி வலயங்கள் பலவற்றை முந்தியடித்துள்ளது.

உயர்தரம் கற்பதற்கு தகுதியடைந்த மாணவர்களின் பெறுபேற்று பகுப்பாயின் அடிப்படையில் 2020இல் 70.21சதவீத்தினைப் பெற்றுக்கொண்ட குறித்த கல்வி வலயம் 2021இல் 74.14 சித்தி வீதத்தினையும் பெற்று உயர்வடைந்துள்ளது.

இதேவேளை குறித்த வலயத்தில் இவ்வருடம் பாடசாலைகளில் வரலாற்று சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. குறித்த வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்களும், அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் ஒரு மாணவரும் நாவற்காடு நாமகள் மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்களும் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இருட்டுச்சோலைமடு பாடசாலை, கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் போன்றன உயர்தரம் கற்க தகுதியடைந்த பாடசாலை தரப்படுத்தல் வீதத்தில் 100வீத சித்தியைப் பெற்றுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

இப்பெறுபேற்றை பெற்ற மாணவர்களை வாழ்த்துவதுடன், கற்பித்த ஆசிரியர்கள், வழிநடத்திய அதிபர்கள், ஆலோசனையும், மேற்பார்வையும், மேலதிக செயற்பாடுகளையும் முன்னெடுத்த ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர், எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்தி, மேற்பார்வையோடு ஆலோசனைகளையும் வழங்கி வரும் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோருக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி சமூகம் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டது.