கல்குடா நிருபர்.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் எல்லைகளை அடையாளப்படுத்தி தந்துதவுமாறு கோரி ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவரும் சமூகச்செயற்பாட்டாளருமான ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் மற்றும் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி தலைமையிலான மாஞ்சோலை பிரதேச சமூக அமைப்புக்களினால் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கால மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காணிகளை கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், அத்துமீறி எல்லை இடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனைக்கருத்திற்கொண்டே ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லையை அடையாளப்படுத்துமுகமாக இக்கோரிக்கை சமூக மட்ட அமைப்புக்களினால் விடுக்கப்பட்டுள்ளது.
மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஞ்சோலை 207A கிராமத்தில் முஸ்லிம் மக்களும் கோறளைப்பற்று, வாழைச்சேனை மீராவோடை தமிழ் கிராம எல்லையில் தமிழ் மக்களும் சுமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகம் தனது நிருவாக எல்லையின் நிலப்பரப்பாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் மாஞ்சோலைக்கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதியை தங்களது ஆளுகைக்குட்பட்டதாக சொல்கின்றது.
இதன் காரணமாக அப்பிரதேசத்தில் சுமூகமாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுகின்றது. இதன் விளைவாக எதிர்காலத்தில் இரு சமூகங்களுக்கிடையிலும் பாரிய இன முறுகல் நிலை உருவாகக்கூடிய நிலை காணப்படுகின்றது.
ஆகவே, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நிலப்பரப்பின் தெற்கு எல்லையை சரியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்வதுடன், வீணான பிரச்சினைகளைத் தவிர்ந்து கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகஜர் கையளிக்கும் போது ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவரும் சமூகச்செயற்பாட்டாளருமான ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மற்றும் மாஞ்சோலை சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்