கோட்டா – மஹிந்த வெளிநாட்டு பயணங்கள்: 2021ஆம் ஆண்டு மட்டும் 40 மில்லியனுக்கும் அதிக பணம் செலவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2021ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களினால் மாத்திரம் அரசாங்கத்துக்கு 40 மில்லியன் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விபரங்களின் மூலம் இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபரங்களின்படி, ராஜபக்ஷ சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக 44 மில்லியனுக்கும் அதிக பணத்தை (44, 739,184.91) செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த 44 மில்லியன் ரூபாயில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக 36 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார் என்பதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 7 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக அந்த விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது, ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினம் மிக அதிகமாக இருந்ததாகவும் முன்னாள் பிரதமருடன் வெளிநாடுகளுக்குச் சென்ற பெருமளவான அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நண்பர்களே இதற்குக் காரணம் எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு, இந்த விடயம் தொடர்பான உரிய விபரங்கள் கோரிய கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இது தொடர்பான மேன்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விபரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.