அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு!

அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்,

எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். மேலும் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது.

எனவே மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.