கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்போது, “..எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் துருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்..” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் உரத்த குரலில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், பொலிஸ் ஆணைக்குழு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய வரவு- செலவு திட்ட விவாதத்தின் போது மேலும் உரையாற்றிய மனோ கணேசன் எம்பி கூறியதாவது,
கொழும்பு நகரில் வீடு வீடாக சென்று, போலீசார் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இதுபற்றி ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். துறைசார் அமைச்சர் உங்களுக்கு கூறியுள்ளேன். பொலிஸ் மாஅதிபருக்கு கூறியுள்ளேன்.
பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு கூறியுள்ளேன். அவர் இன்று இருக்கிறாரோ தெரியவில்லை அல்லது யாரையாவது வரவேற்க விமான நிலையத்துக்கு சென்று விட்டாரோ தெரியவில்லை.
கீழ்மட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டால், “மேலிடம் கூறிதான் செய்கிறோம் சார்”, என்று அவர்கள் எனக்கு கூறுகிறார்கள். யார் அந்த மேலிடம்? யுத்த காலத்தில் ஏதோ ஒரு நியாயம் இருந்தது. இன்று சமாதான காலம். இயல்புநிலை காலம் . இன்று யுத்தம் இல்லை. பயங்கரவாதம் இல்லை. அரச பயங்கரவாதம் இல்லை. ஆகவே எதற்காக வீடு வீடாக போகிறீர்கள்? கதவு கதவாக போகிறீர்கள்?
கிரிமினல்கள் எங்கேயும் உள்ளார்கள். இங்கே இந்த பாராளுமன்றத்தில் இல்லையா? கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்கள், வழக்கு உள்ளவர்கள் இங்கே இல்லையா? இருக்கிறார்கள். அதுபோல் பொலிசிலும் உள்ளார்கள். பொலிசுக்கு தரும் தகவல்கள் கிரிமினல்கள், பாதாள உலகத்தினர் கைகளுக்கு போயுள்ளன. கடந்த காலங்களில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆகவே அது வேண்டாம். எனது மாவட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் நடவடிக்கைக்கு இடம் தர எனக்கு முடியாது.
எனது மக்கள் என்னிடம் புகார் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம்தான் கூறுவார்கள். நான்தான் அவர்களின் பிரதிநிதி. எனது மக்கள் என்னை பாராளுமன்றம் அனுப்பியது, தேங்காய் திருவ அல்ல! பம்பு அடிக்கவும் இல்லை! (பொல் கஹன்ன நெவெய்! பம்பு கஹன்னத் நெவெய்!) என்பதை புரிந்து கொள்ளுங்கள்
குற்றம் செய்தவர்கள் இருப்பார்களானால், அவர்களை விசாரியுங்கள். கைது செய்யுங்கள். அதில் பிரச்சினை இல்லை. நான் சட்டத்தை மதிக்கும் எம்பி. சட்டத்தின் ஆட்சியை விரும்பும் மனிதன். இங்கே, வீடு வீடாக பொதுவாக போக வேண்டாம் என்பதைதான் நான் கூறுகிறேன். இங்கே குறிப்பாக கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இவை நடைபெறுகின்றன. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
(இவ்விடத்தில் இடைமறித்த அமைச்சர் டிரான் அலஸ்)
எம்பி அவர்களே, இது எப்போதும் நடக்கும் ஒரு கைங்கரியம். வெளியூரில் இருந்து ஒருவர் கொழும்புக்கு வருவார் என்றால் அது அறிய போலிஸ் தகவல் சேகரிக்கிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, நாடு முழுக்க நடக்கிறது. தமிழர்களை மட்டுமல்ல, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற எல்லோர் வீடுகளுக்கும் பொலிஸ் போகிறது.
(மனோ கணேசன் எம்பி)
இல்லை, இல்லை. தமிழர்களையே இது அதிகம் குறி வைக்கிறது. சும்மா இங்கே வந்து கூறுவதற்கு எனக்கு என்ன பைத்தியமா? நீங்கள் சொல்வது போல், இது நாடு முழுக்க நடக்கவில்லை. சும்மா சொல்ல வேண்டாம். இங்கே உள்ள ஏனைய 225 எம்பிகளிடம் கேட்டு பாருங்கள். நாடு முழுக்க இது நடக்கவில்லை. கொழும்பில் நடக்கிறது. இது நியாயப்படுத்த முயல வேண்டாம். உண்மையில் இங்கே மக்கள் மட்டத்தில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை. ஆனால், எனக்கு தெரிகிறது. ஏனெனில் நான் மக்கள் மட்டத்தில், மத்தியில் இருப்பவன். இதை நீங்கள் நியாயப்படுத்த முயல வேண்டாம்.
சரி, “செக்” செய்து பார்ப்பதாக, பரிசோதனை செய்து பார்ப்பதாக இப்போது கூறுகிறீர்கள். ஒலிவாங்கியை அணைத்து விட்டு கூறுகிறீர்கள். பாருங்கள். குற்றவாளியை தேடி சென்று கைது செய்யுங்கள். விசாரியுங்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீடு வீடாக பொதுவாக போவதற்கு இடம் கொடுக்க முடியாது.