பிள்ளையானின் ஊழல் மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நேற்றைய தினம் நான் சபையிலே இல்லாத போது என்னுடைய பெயரினை பயன்படுத்தி என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினர் சில கருத்துக்களை சொல்லியிருந்தார். எனவே அதுகுறித்த சில தெளிவுபடுத்தல்கள்.
எனக்கு என்னுடைய தாயும் தந்தையும் வைத்த பெயர் சாணக்கியன் இராகுல் இராஜபுத்திரன் ராசமாணிக்கம். அதுபற்றி அவருக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் அவர் அதனைபற்றி பேசலாம்.
இரண்டாவதாக காணி அபகரிப்பு பற்றி ஒருவிடயம் சொல்லியிருந்தார் என்னுடைய பெயரினை பயன்படுத்தி. காணி அபகரிப்பினை பற்றி ஏதேனும் இருந்தால் நான் ஜனாதிபதியிடம் கேட்கின்றேன்.
குழு ஒன்றினை நியமித்து நான் என்னிடமுள்ள ஆவணங்களை கையளிக்கின்றேன். அதனை ஆராயுங்கள். அதேபோன்று சிவநேசதுரை சந்திரகாந்தனுடைய ஆவணங்களையும் தருகின்றேன் அதனையும் நீங்கள் விசாரியுங்கள்.
மூன்றாவதாக நான் கனடாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தார். கனடாவிற்கு விசா எடுத்து எப்படி போவது என்று தெரியாது என்பதனை அவர் நிருபித்துள்ளார். கனடாவிற்கு ஆட்களை கடத்தி காசு உழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆனால் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் என அழைக்கப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.