வரவு செலவுத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – மஹிந்த

வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாம் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார்.

அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய பல நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்பாடுகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறையின் யதார்த்தங்கள், அத்தகைய மூலோபாயத் திட்டத்தில் நாம் நகர்ந்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். எனவே நாம் அனைவரும் திருத்தங்களுக்கு உட்பட்டு அதை ஆதரிப்பது முக்கியம்.

எங்களால் தாங்க முடியாத அளவுக்கு கடனை நல்லாட்சி அரசாங்கம் பெற்றுள்ளது. இது நாட்டுக்கும் இந்தச் சபைக்கும் இரகசியமில்லை.

இன்றைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சில யோசனைகளை முன்வைத்தவர்கள் அந்த அரசாங்கத்தில் இருந்தனர். பொறுப்பேற்கச் சொன்னால், இல்லை என்கிறார்கள். அவர்கள் எப்போதும் பிரபலமான பக்கத்தில் இருக்க விரும்புகிறார்கள்.

அப்படிப்பட்ட வீரம் நமக்குத் தேவையில்லை. பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்வது நமது மனப்பான்மை. நான் ஒருபோதும் மக்களைவிட்டு ஓடியதில்லை. அப்படி நடக்காது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.