பிரபாகரனின் வழியில் எதிர்க்கட்சியினர் – பிரசன்ன குற்றச்சாட்டு

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அதனூடாக இலாபமடைய முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

குறுகிய அரசியில் நோக்கத்துக்காக வன்முறைக்கு துணை சென்றதால் ஏற்படும் இறுதி விளைவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனநாயக முறை ஊடாகவே முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறை ஊடாக, நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் போராட்டத்தை தூண்டிவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.