மனித உரிமை மேம்பாட்டுக்கு இடையூறாகும் நெருக்கடிகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் தற்போதைய நிலையிலும் மனித உரிமை சார்ந்து செயற்பட்டு வருபவர்கள், அவர்களது அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அலுவலகங்களில் இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகள் வடக்கு கிழக்கில் நடைபெறுகின்றமைக்கான வரலாறுகளே பதிவாகின்றன.
பொது மக்கள் தங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்கோரி எவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அதற்கெதிராக சட்டரீதியான இறுக்கங்களே காணப்படுகின்றன. அவ்வாறான பொது மக்களுடைய மனித உரிமை சார்ந்த விடயங்களில் ஈடுபடும் சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள், அதன் செயற்பாட்டாளர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதும் தொடர்கின்றன.

இதன் காரணமாக அவ்வாறான மனித உரிமை, சமூக அமைப்புக்கள் தங்களுடைய செயற்பாடுகளை மிகுந்த அச்சத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நெருக்குதல்கள் காரணமாக எதிர்காலத்தில் மக்களுடைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கும் யாருமற்றதொரு நிலைமையை உருவாக்கலாம்.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு சார்ந்தவர்களையே இலக்காகக் கொண்டிருந்த இவ்வாறான நெருக்குதல்கள் இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து உருவான பொருளாதார நெருக்கடி காரணமாக, முன்னாள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினையடுத்து தென்பகுதிகளையும் தற்போது ஆக்கிரமித்திருக்கின்றமையானது மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது என்றே கூறலாம். இதுவரை 300 வரையானோர் இவ்வாறு கைது மற்றும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பொது மக்களுக்கெதிரான அரச பொறிமுறையின் நெருக்குதல்கள் இதுவரை முடிந்தபாடில்லை என்பதற்கு அண்மைக்காலமாக நடைபெற்ற விசாரணைகள் உதாரணமாகும். யுத்தத்துக்கு முன்னர் இருந்துவந்த அடக்குமுறைகளுக்கு மாறாக அதன் பின்னர் நடைபெறுக்கின்ற விசாரணைகளும் கைதுகளும் மக்களையும் சிவில் செயற்பாட்டாளர்களையும் அச்சமானதொரு மனோநிலையிலேயே வாழ்க்கையை நடத்தவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.
14.05.2020அன்று, அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சவளக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்த பொலிஸ் அதிகாரி அம்பாறை மாவட்டப் பெண்கள் வலையமைப்பு எவ்வாறான வேலைகளை மேற்கொள்கின்றது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுடன் வேலை செய்கின்றீர்களா எனக் கேட்டுக் கொண்டதுடன், இணைப்பாளர் கலைவாணியின் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தினையும் பெற்றுச் சென்றுள்ளார்.
13.05.2020 திருகோணமலை மாவட்டத்தில் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அமையத்தின் அலுவலகத்திற்கு சிவில் உடையில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு அதிகாரி சென்று அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இணைப்பாளர் இ.கலாராணி மற்றும் கணக்காளர் பிரியா ஆகியோரிடம் அமையத்தின் செயற்பாடுகள் என்ன என்பதனை கேட்டுக் கொண்டதுடன், இங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும், என்ன என்ன வேலை செய்கின்றீகள் என்ற செயற்பாட்டு விளக்கத்தினையும் எழுத்து மூலம் வழங்குமாறு கேட்டுக் கொண்டு சென்றுள்ளார். இவ் அலுவலகம் விழுது நிறுவனத்தின் அலுவலகமா என முதலில் கேட்டுள்ளார். பின்னர் எங்கு விழுது நிறுவனம் இருக்கின்றது என்பதனையும் கேட்டுக் கொண்டு சென்றுள்ளார்.
அகம் மனிதாபிமான வள நிலையமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. இந் நிறுவனத்தின் இணைப்பாளர் மற்றும் பெண்கள் திட்ட இணைப்பாளர், கள உத்தியோகத்தர்களிடம் 06 தடவைகளுக்கு மேல் விசாரணைகளை அலுவலகத்திலும், வீடுகளுக்கு சென்றும் தொலைபேசி அழைப்பு ஊடாகவும் மேற்கொண்டிருந்தனர்.
05.01.2021 அன்று கிழக்கு மாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில், திருகோணமலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தொலைபேசி அழைப்பினை இணைப்பாளரான க.லவகுசராசாவுக்கு மேற்கொண்டு இந்தப் போராட்டங்களை திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு முழுவதுமாக நீங்கள்தான் மேற்கொள்ளவுள்ளீர்கள் உடன் அதனை நிறுத்த வேண்டும் எனவும், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தரவேண்டும் எனவும் கேட்டிருந்தார். அத்துடன் ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரார்த்தனையின் போது புலனாய்வாளர்களின் வருகை காணப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தியும் இருந்தனர்.
03.03.2021 தொடக்கம் 07.03.2021 வரையாக இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியில், பங்கெடுப்பதனை தடுப்பதற்காக நிறுவனத்தின் இணைப்பாளர் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மற்றும் அக்கரைப்பற்று நீதி மன்றங்கள் ஊடாக நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி கடந்த 08.03.2021 அன்று அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் இருக்கிறாரா எனவும், பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களின் பெயர், விலாசம் பயன்படுத்தம் வாகன இலக்கம் போன்றவற்றினையும் கோரியிருந்தனர்.
2020 ஆண்டு; ஒக்ரோபர் காலப்பகுதிகளில் அகம் மனிதாபிமான வள நிலைய கள உத்தியோகத்தரான அரவிந்தன் மூதூரில் கள வேலைக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வழிமறித்த புலனாய்வாயர்கள் என்ன வேலை செய்கிறீங்கள் எங்கு செல்கிறீர்கள், என பல முறைகளில் விசாரணை நடாத்தி இருந்தனர். அதே போன்று 09.03.2021 குறித்த உத்தியோகத்தரை திருகோணமலை லிங்கநகர் வீதியில் புலனாய்வாயர்கள் வழிமறித்து இணைப்பாளருக்குத் தெரியாமல் உங்கள் உத்தியோகத்தர்களின் விபரங்களை பெற்றுத்தாருங்கள் எனக் கேட்டிருந்தனர்.
அதே போன்று 06.08.2021 அன்று பெண்கள் திட்ட இணைப்பாளர் வீட்டில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் எந்த முன்னறிவித்தலும் இன்றி அவர்களின் வளாகத்திற்கு வந்த இருவர், வீட்டின் முன் அறையில் இருந்த நாற்காலிகளை எடுத்து, உத்தியோகத்தர் பணியாற்றிக்கொண்டிருந்த இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டு தாங்கள் கொழும்பு புலனாய்வு உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தியிருந்ததுடன், நீங்கள் தற்போது எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் எனவும், என்னென்ன பணிகள் செய்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளனர். அந்த வேளையில் உரிய எமது உத்தியோகத்தர் அவர்களை நோக்கி இது என்னுடைய வீடு, வேலை விடயம் ஏதாவது தேவை என்றால் எங்களின் அலவலகத்திற்கு சென்று விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும், ஏன் எனது வீட்டிற்கு வந்தீர்கள் எனக்கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பலுனாய்வு உத்தியோகத்தர்கள் எங்களுக்கு உங்கள் அலுவலகம் தெரியும் நாங்கள் போவோம் எனக் கூறியதுடன், மீண்டும் உங்களின் விட்டிற்கு வருவோம் எனக் கூறியும் சென்றிருந்தனர்.
13.05.2020 மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுடன் பணியாற்றிவரும் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு (ரீ.ஐ.டி) அலுவலக அதிகாரிகள் மூவர் சென்று என்ன என்ன வேலைகள் தற்போது செய்கின்றீர்க்ள, என விபரமான தரவு தகவல்களை பெற்றுக் கொண்டதுடன், மன்னார் சிட்டிசன் கொமிற்றி தொடர்பான தரவுகளையும் கேட்டதுடன், தனிப்பட்ட ஒரு சில நபர்களின் பெயர்களையும் கேட்டுக் கொண்டனர். அதே போன்று 15.09.2020,; 17.09.2020 ஆகிய தினங்களி;ல் தொலைபேசி அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு அலுவலக விடயங்கள் பணிகளைக் கேட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 30.12.2020 அன்று அலுவலகத்திற்கு வருகை தந்து வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்களை கேட்டுக் கொண்டதுடன், கொழும்பிற்கு விசாரணைக்கு வருமாறு கோரிய கடித்தினையும் வழங்கி இருந்தனர். அதன் அடிப்படையில் நிறுவனத்தின் ஒரு பெண் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு 16-17.01.2021 ஆகிய 02 நாட்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 09-10.07.2021 02 நாட்களும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்து இணைப்பாளரான ச.திலீபனை விசாரணைக்கு உட்படத்தியிருந்தனர். அதுமட்டுமன்றி மேற்படி இணைப்பாளரின் தந்தையாரான சகாயம் என்பவருக்கு பல முறை தொலைபேசி அழைப்பக்களை எற்படுத்தி ஏன் உங்கள் மகளை சரியாக வழக்கவில்லை எனவும், தற்போது அவர் எங்கு நிற்கிறார் எனவும் கேட்டுக் கொண்டு இருப்பதுடன், உரிய இணைப்பாளருக்கும் 10.07.2021 இற்கு பின்னர் 05 தடவைக்கு மேல் தொலைபேசி அழைப்பக்களை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
கிளிநொச்சி சிவில் உரிமைகள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் பெண்களாவர். இந்நிறுவனமானது கிளிநொச்சியில் தனது அலுவலகத்தினை அமைத்து செயற்பட்டு வருகின்றது. கடந்த 1.11.2019 அன்று கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அடுத்து 20.02.2020 அன்று நிறுவனத்திற்கு தங்களை புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி 02 ஆண் உத்தியோகத்தர்கள் சென்று இந் நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக விசாரணை நடாத்தி பெற்றுச் சென்றுள்ளனர்.
அத்துடன் கடந்த 18.05.2020 அன்று கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கிளிநொச்சியில் வைத்து வழங்கிய போது நிறுவனத்தின் பெண் உத்தியோகத்தர்களை புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி 26.05.2020 அன்றும் கொவிட் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போது உரிய கிராம அதிகாரியிடம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இந்நிறுவனம் தொடர்பாகவும், உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் கேட்டுச் சென்றுள்ளனர். தொடர்ச்சியாக கடந்த 26.05.2020, 27.05.2020, 29.05.2020 மற்றும் 30.05.2020 அன்றும் புலனாய்வு உத்தியோகத்தர்கள் உரிய நிறுவனத்திங்கு வருகை தந்து இவர்களின் பணிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
கடந்;த யூலை மாதம் 31ஆம்திகதி திருகோணமலை அகம் மனிதாபிமான வள நிலைய அலுவலகமும் கடந்த செப்ரம்பர் 09ஆம் திகதி மன்னாரில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் அலுவலகமும் உடைக்கப்பட்டு ஆவணங்கள் தேடப்பட்டும் மற்றும் இலத்திரனியற் சாதனங்களில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் களவாடப்பட்டுமிருந்தது. இவ்வாறு பல விசாரணைகளும், விபரத்திரட்டல்களும், நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் தான் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்துக என்ற கோசம் உருவாகத் தொடங்கியது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட, மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ), பணிப்பாளர், யே.யாட்சன் பிகிராடோ –

உண்மையில் நாட்டுக்கு சிவில் சமூக அமைப்புக்கள் என்பது இன்றியமையாத தேவையாகும். நாட்டின் சமாதானம், அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக மக்களோடு மக்களாகப் பணியாற்றக்கூடிய சிவில் சமூகங்களுக்கு இந்த அரசும் சரி ஏனைய அமைப்புக்களும் சரி கௌரவமான உரிமைகொடுக்க வேண்டிய பெறுப்பும் கடமையுமுள்ளது. ஏனென்றால்; அரசு மக்களுக்கெதிராக முன்னெடுக்கின்ற செயற்திட்டங்களைத் தட்டிக்கேட்கக்கூடிய வலிமைபடைத்தவர்கள். ஆகவே அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தவறி அவர்களுக்கெதிராக வன்முறைகளைக் கட்டவிழ்ப்பது, அவர்களுடைய பணிகளுக்கு இடையூறாகச் செயற்படுவது, அவர்களது நிருவாக நிலைமைகளைச் சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். எனவே அவர்களைப் பாதுகாப்புடன் அவர்களுடைய செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுதி பூணவேண்டும். அத்துடன் இந்த நாட்டினுடைய சமாதானம் போன்ற அபிவிருத்தி போன்ற இலக்குகளை மேம்படுத்துவதற்கு சிவில் சமூகத்தின் பணி சிறப்பதற்கு ஒத்துழைக்காவிடின் இந்த அரசு பாராதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஏனென்றால் கோவிட் காலத்தில் அதிக வலிமையுடன் அதிக கைகொடுத்தது, அரசினுடைய பொருளாதாரப்பிரச்சினையில் பெரிய பங்கை மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுடைய முன்னேற்றத்திற்கு உதவி செய்தது சிவில் சமூக அமைப்புகள் என்பதில் எந்த ஐயமுமில்லை. அந்தவகையில் சிவில் சமூக அமைப்புக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கிருக்கிறது என்றார்.

சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருடைய குடும்பங்கள் போன்ற சமூக மட்ட அமைப்புக்கள் இராணுவம் மற்றும் பொலிஸ் போன்ற அரச புலனாய்வாளர்களாலும் தேசிய புலனாய்வு பணியகத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர், கண்டுமணி லரகுகுராசா கருத்து வெளியிடுகையில்,

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி உரிமை சார்ந்த விடயங்களை அவர்கள் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுக்கு பக்கபலமாகச் செயற்படுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பரிந்துரை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் பலவிதமான அச்சுறுத்தல்களை இலங்கை புலனாய்வாளர்களும், படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்த போதிலும் அவ்வாறான சவால்களுக்கும் மத்தியில் தொடர்ந்தும் எங்களுடைய மக்களின் நீதி மற்றும் உரிமைக்கான இலகுபடுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆவணி முதலாம் திகதி முதல் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட 100 நாள் செயல்முனைவை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இலங்கையின் படைத்தரப்பில் இருக்கின்ற புலனாய்வாளர்கள் ஊடாக எமது செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், உத்தியோகத்தர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதை உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான குரல்வளையை அடக்குகின்ற செயற்பாடாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே கடந்த யுத்தகாலமாக இருக்கலாம். அல்லது அதற்குப்பின்னரான காலமாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, உரிமை சார்ந்த விடயங்களில் இலங்கை அரசு முற்றுமுழுதான பங்களிப்பைச் செய்ய வேண்டும். பொறுப்புக்கூறலை மேற்கொள்ளவேண்டும். ஆகவே அது சார்ந்த விடயங்களை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் வினயமாக வேண்டுகின்றோம். என்ன சவால்கள் வந்தாலும் சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் தொடர்ந்தும் இந்த மக்களின் நீதி, உரிமைக்காக ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொள்வோம் என்பதில் அச்சமோ சந்தேகமோ இல்லை என்றார்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக இரவு நேரங்களில் கூட தொலைபேசி அழைப்புக்களினை ஏற்படுத்தி அவர்களின் வேலை, திட்டம் தொடர்பாக வினவுதல் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தினை தரும்படி கோருதல்.
இராணுவம் மற்றும் பொலிஸ் போன்றனர் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களினை வெவ்வேறு இடங்களில் இருந்து ஏற்படுத்தல். சிவில் செயற்பாட்டாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின்தொடர்தல். சிவில் செயற்பாட்டாளர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல், தமிழ் புலம்பெயர் குழுக்களோடு சிவில் செயற்பாட்டாளர்களுக்கு தொடர்புகள் உண்டு என குற்றஞ்சாட்டல். இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்படல் என தொடர்ந்த வண்ணமிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன்,

மனித உரிமை, சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகளும், அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் வடக்கு கிழக்கில் இருந்த நிலை ஆளும் அதிகாரத்துக்கெதிராக போராட்டமாக வெடித்ததையடுத்து தெற்கிலும் நடைபெற்று வருகிறது. இச் செயற்பாடானது எதிர்காலத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அடக்கு முறையையோ, உயிர் அச்சுறுத்தலையோ உருவாக்கலாம் என்ற ஐயப்பாடு எம்மத்தியில் காணப்படுகிறது.
குற்றங்கள் என நாங்கள் அவதானிக்கும் விடயங்களுக்கு நடவடிக்கை எடுப்பதனைத் தவிர்த்து சட்ட திட்டங்களுக்கு அமைய தாம் சார்ந்த இனம், மொழி, சமயம் சார் உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இச் செயற்பாடானது, நீடிக்குமேயானால் இந்த நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவல்ல ஜனநாயகம் அற்றுப் போகும் ஏன்றார்.

இவ்வாறான பல கருத்துக்கள் காணப்பட்டாலும் பலர் பெயர் குறிப்பிட்டுப் பேசுவதற்கும், கருத்துக்களைப் பகிர்வதற்கும் அச்சப்படுகின்ற நிலைமையே காணப்படுகிறது.

இது போன்ற அச்சுறுத்தல்கள் புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் குறைந்திருந்தாலும் மேலும் அச்சமூட்டும் செயற்பாடுகளை எண்ணிய வண்ணமே சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இயங்கி வருகின்றனர். இவ்வாறான நிலைமையானது உலகமும் நம் நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்ற மனித உரிமைகளுக்கான பாதுகாப்பை நல்குமா, எதிர்காலத்தில் நிம்மதி தொடருமா என்ற ஏக்கத்துடனேயே முன் நகரவேண்டிய எதிர்வுகூறல்களே காணப்படுகின்றன.

எல்.ரி.அதிரன்