மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டமும் சிறுவர் தின நிகழ்வும்

சிவாநந்த நண்பர்கள் வட்டத்தால் மாதாந்தம் நடைபெறும் மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது பாடசாலைத் திட்டம் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டதுடன் கருவப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக ” மகிழ்ச்சிகர மாணவர் பயணம் ” எனும் தொனிப்பொருளில் 1998 மற்றும் 2001 ஆம் ஆண்டு சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் சிவானந்தாவில் படித்த மாணவர்களின் மாதாந்தச் செயற்பாடாக மேற்படி திட்டமானது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அதன்படி இம்மாதத்திற்கான திட்டத்தில் கருவப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 40 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. சர்வதேச சிறுவர் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சிறுவர் தினத்தின் முக்கியத்துவம் உரையாடல்களும் பாடல்களும் இணைந்த பங்குகொள்ளற் செயற்பாடாக கருவப்பங்கேணி விபுலானந்தாவில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் விசேட வைத்திய நிபுணரான த. சுஹாஜனன் அவர்களின் நிதி அனுசரணையில் மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் ஐந்தாவது திட்டம் பாடசாலையின் அதிபர் திருவாளர் எஸ் சாந்தகுமார் தலைமையிலும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.பூபாலராஜாவின் ஒருங்கிணைப்பிலும் திறம்பட நடைபெற்றது.

மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தினை திருவாளர் வி.பூபாலராஜா சிறந்த முறையில் ஒருங்கிணைத்திருந்தார்.

பாதணி வழங்கப்பட்டதற்கு மேலதிகமாக இத்திட்டம் மற்றும் சிறுவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றியும் கல்வியால் மாணவர்கள் எவ்வாறு சொந்தக்காலில் நிற்கலாம் என்பதையும் கலாநிதி து. பிரதீபன் நோபல் பரிசு பெற்ற வீரச் சிறுமி மலாலாவின் வாழ்க்கைச் சரிதத்தை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு விளக்கினார்.

கூடி மகிழ்தலும் ஒற்றுமையாக இயற்கையுடன் இணைந்து வாழ்தலின் முக்கியத்துவம் மற்றும் நானாக அல்லாமல் நாமாக சிறுவர்கள் வாழ்ந்து மகிழ வேண்டியதன் அவசியம் மற்றும் ஏற்றத்தாழ்வில்லா மாணவர் மகிழ்ச்சிச் சூழலை உருவாக்குதல் பற்றி பல ஆழமான சித்திக்கத்தக்க விடயங்களை கலாநிதி த.விவானந்தராசா பாட்டிசைத்து மாணவர்களுடன் இணைந்த பங்குகொள்ளற் செயன்முறையாக விளக்கியிருந்தார்.

மேற்கொண்டு திருவாளர் அ.சித்தாத்தன் சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றிக் கூறியதோடு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் வெற்றிப் பாதைக்கு எவ்வாறு உதவும் என்பதை தன்னுடைய அனுபவமூடாக திறம்பட வெளிப்படுத்தியிருந்தார்.

அதிபராலும், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் வட்ட அங்கத்தவர்களாலும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன.

இறுதியாக திருவாளர் ந.பிரசன்னா நன்றியுரை வழங்க பாடசாலைகளுக்கான ஐந்தாவது திட்டம் இனிதே நிறைவுற்றது.

சர்வதேச சிறுவர் தின த்தையொட்டி நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு சந்தோசமான நாளாக கொண்டாடப்பட்டது.