ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கை- ஈரோஸ் ஜனநாயக முன்னணி

ஜூன் 9 ஆம் திகதி கொழும்பு மாநகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்துக்கு முன்னால் வைத்து பாதுகாப்புத் தரப்பினரால்  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையாகுமென ஈரோஸ் ஜனநாயக முன்னணி  பொதுச் செயலாளர் நாயகம் இரா.ஜீவன் இராஜேந்திரம்  இன்று புதன்கிழமை  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்த நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்ட போதெல்லாம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தூண்களாக ஊடகவியலாளர்களே செயல்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக 1971,1989  கிளர்ச்சியில் சிங்கள இளைஞர்கள் மீது மேற்கொண்ட ஜனநாயக விரோத படுகொலையின் போதும், 1980களில் தமிழர் தரப்பினரின் போராட்ட காலங்களின் போது மக்கள் மீதான இரானுவ அடக்குமுறைகளை  வெளி உலகுக்கு கொண்டு வருவதில்  ஊடகத் துறையினரின் பங்கு மகத்தானது. இன்றைய போராட்ட வெற்றிக்கு பின்னைய காலங்களில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் ஊடகங்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமானால், அரசியல் அமைப்பில் அடிப்படைவுரிமைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளில் தலையிடாதிருக்க வேண்டும்.

இதேவேளை கடந்த கால அரசாங்கங்களால் ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் பல்வேறு வகையிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகப் பல ஊடகவியலாளர்கள் உயிரிழந்ததோடு, பலர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர்.

இந்நிலையில் ஜூன் 9 ஆம் நாளில் பொதுமக்கள் முன்னிலையில் உண்மை நிகழ்வுகளை நாடறிய, உலகறியச் செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை எமது நாட்டில் ஊடக சுதந்திரம் எவ்வாறு உள்ளது என்பதை கோடிட்டுக் காட்டியது. இதன்போது குறித்த ஊடகவியலாளர்கள் தம்மை அடையாளப்படுத்தும் ஊடக அடையாள அட்டை மற்றும் ஊடக இலட்சினை பொறித்த ரீசேட்டினை அணித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பதவியேற்கவிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் தமது கடமைகளைத் தங்கு தடையின்றி மேற்கொள்ள உரிய வழிவகைகளைச் செய்து கொடுக்க வேண்டும். அத்தோடு ஊடகவியாளர்களைத் தாக்கிய பாதுகாப்புத் தரப்பினர் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.