மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில் தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2022

இலங்கையின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20,21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர்  விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட உள்ளது என டேட்டா சரிட்டியின் பணிப்பாளர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள கமிட் நிறுவன அலுவலகத்தில் (06.07.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தில் தலைவரும் டேட்டா சரிட்டி பணிப்பாளர்களில் ஒருவருமான கந்தசாமி ஜீவராசா, சம்மேளனத்தின் ஆலோசகர் சோமசுந்தரம் புவிராசசிங்கம், டேட்டா சரிட்டி பணிப்பாளர்களில் ஒருவரான தங்கரெட்ணம் விநாயகமூர்த்தி, கமிட் நிறுவனத் திட்டப்பணிப்பாளர் கந்தவேள் காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த, எஸ்.அருள்மொழி,

டேட்டா சரிட்டி ( DATA Charity )  , மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில்  கிழக்கு மாகாணத்தில் இருந்து (திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை )  1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய நிறுவனத்தினர் வழங்குகின்றனர்

மட்டக்களப்பில் இருந்து  26  மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும் , அம்பாறையில் இருந்து 08  மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் , திருகோணமலையில் இருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவையாக உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட பராமரிப்பு நிலையம் உருவாக்க அனைவரும்  இணைந்து உதவிடவேன்டும் என்ற பரப்புரையை இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் நாம் முன்வைக்கின்றோம்.

தமிழ் பரா விளையாட்டு விழாவானது 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு இருந்தன கொவிட் பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல் அங்கமாக பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும்  உதயம்- விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும், யாழ். விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்கு பற்றுகின்றனர் .

இந்த விளையாட்டு விழாவிற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், விளையாட்டு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் உதவி புரிகின்றன. அவர்களுக்கும் எமது டேட்டா சரிட்டி நன்றிகளை  தெரிவித்துக் கொள்கின்றோம்.