மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் துவிச்சக்கரவண்டிப் பாவனை அதிகரித்துள்ளமையை காணமுடிந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக துவிச்சக்கரவண்டிகளில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையை அவதானிக்கமுடிந்தது.
அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களில் வேலையில் ஈடுபடுகின்றவர்களும் துவிச்சக்கரவண்டிகளில் தமது வேலைத்தளங்களுக்கு பயணிப்பதுடன், சிறுவர்த்தகர்களும், ஏனைய தொழில்களில் ஈடுபடுகின்றவர்களும் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தி பொருட்களை ஏற்றிச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுப்போக்குவரத்து இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்களும், உத்தியோகத்தர்களும் கால்நடையில் பயணம் செய்கின்றனர்.
துவிச்சக்கரவண்டிகளின் பாவனை அதிகரித்து வருகின்ற சூழலில், துவிச்சக்கரவண்டியின் பெறுமதியும் அதிகரித்துள்ளது. பொருளாதார பிரச்சினைக்கு முன்பதாக 15000க்கு விற்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் தற்போது 50ஆயிரத்தினையும் கடந்து விற்பனை செய்யப்படுகின்றன. துவிச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்களுக்கும் விலைகள் அதிகரித்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
முச்சக்கரவண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் அவசர நிலையின் போது போக்குவரத்து செய்யமுடியாத நிலையும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் போக்குவரத்துப்பிரச்சினை இருப்பதாகவும் கூறுகின்றனர்.