மக்கள் கேட்பது என்னவோ ஆனால், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ -பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா

மக்கள் கேட்பது என்னவோ ஆனால், நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ, மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியையே ஒட்டுமொத்த நாடும் வேண்டாமென்று கூறும் போது, நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரைப் பிரதமராக நியமித்திருக்கின்றார். எதிர்வரும் வாரத்தில் புதிய பிரதமர் தனக்குரிய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டி வரும். ஓன்றுக்கு மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் களமிறங்கக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. இவ்வேளையில் தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்; மிகவும் நிதானமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலை தொடர்பில் இன்றைய தினம் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் அதிரடி அரசியல் மாற்றங்கள் பல இடம்பெறுகின்றன. மக்கள் கேட்பது என்னவோ ஆனால், நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ என்ற விதத்தில் நடைமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று மக்கள் ஜனளாதிபதியை பதவி வலகி வீட்டுக்குச் செல்லுமாறு கேட்கின்றார்கள், ராஜபக்ச குடும்பத்தையே அரசியலில் இருந்து ஒதுங்குமாறும், அவர்கள் கடந்த காலங்களிலே இந்த நாட்டில் கொள்ளையடித்த பணங்களைத் திரும்பத் தருமாறும் கேட்கின்றார்கள். ஆனால், மக்களின் கோரிக்கைக்கு மாறாக அரசாங்கங்களே மாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர இன்னும் ஜனாதிபதி மாறவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள உடனடி பொருளாதாரப் பின்னடைவிற்கு மிக முக்கியமான காரணமானவர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களே.

இலங்கையின் பொருளாதாரப் பின்னடைவு மாறி மாறி வந்த அரசாங்கங்களினால் ஏற்படுத்தப்பட்டவையாக இருந்தாhலும் தற்போது திடீரென ஏற்பட்டிருக்கும் நிலைக்கு முற்றுமுழுதான காரணமாக இந்த ஜனாதிபதியே இருக்கின்றார். இந்த ஜனாதிபதி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே வருமான வரியைக் குறைப்பதாகச் சொல்லியிருந்தார் இந்த நாட்டின் முதலாளித்துவ, முதலாளிமாருக்கு சலுகைகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் வரியை 8 வீதமாகக் குறைத்தார். இதனால், இந்த நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் பின்தள்ளப்பட்டது.

அதற்கும் மேலாக விவசாயிகளின் வயிற்றிலே கையை வைத்தார். இந்த உரப் பிரச்சினையால், மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயச் செய்கை மாத்திரமல்ல ஒட்டுமொத்த வேளாண்மைச் செய்கை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, மரக்கறிச் செய்கை அனைத்தும் விளைச்சலை குறைத்தது. அதனால் உணவுப் பொருள்களைக்கூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கும் மேலாக இந்த ஜனாதிபதி இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை வருகின்றது என்று தெரிந்திருந்தும் சர்வதேசத்திடம், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமல் விட்டது மிகப்பெரும் தவறு. கடந்த பாராளுமன்ற அமர்வில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்றி அவர்கள் இதனையும், இந்த அரசாங்கம் விட்ட ஏனைய தவறுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் கடந்த கொரோனா காலத்தில் கூட உடனடியாக தடுப்பூசியை ஏற்றாமல், அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள். குறிப்பாக சுகாதார அமைச்சர் அவர்கள் ஆயர்வேதத்தினையும், ஆயர்வேத மருந்துகளையும் நம்பியதனால் இந்த நாடு கொரோனாவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுலாத்துறையினால் வரக்கூடிய வருமானத்தை இழந்தது. அந்தவகையில் ஒரு மூடத்தனமான எதிர்காலத்தினை பற்றிச் சிந்தனையில்லாமல் எடுத்த முடிவுகள் தான் உடனடியாக இந்த நாட்டை பொருளாதாரப் பின்னடைவுக்குத் தள்ளியது.

காலி முகத்திடலில் ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஜனாதிபதி விலகாமல் பிரதமரை மாற்றுகின்றார். தற்போது புதிய பிரதமர் ஒருவரை நியமித்திருக்கின்றார். புதிய பிரதமரோ கடந்த தேர்தலிலே ஒட்டு மொத்த நாட்டில் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக் கொள்ள முடியாமல், முழு இலங்கையிலுமே இரண்டு வீதமான வாக்குகளைப் பெற்று கிடைத்த தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வந்தவர். இன்று பிரதமராக ஆகியிருக்கின்றார். கடந்த காலங்களில் கூட இந்தப் பிரதமரைப்பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபையில் ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது, பட்டியலில் உறுப்பினராக வந்து தவிசாளராக வந்தவரைப் போன்று இன்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் பிரதமராக வந்திருக்கின்றார். கடந்த காலங்களில் 5 தடவைகள் பிரதமராக இருந்திருக்கின்றார். அந்தக் காலங்களில் கூட தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்கு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்காத பிரதமர் இன்று வந்திருக்கின்றார்.

அதாவது 69 இலட்சம் வாக்குகளுடன், மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு ஜனாதிபதியையே, ஒட்டுமொத்த நாடுமே வேண்டாமென்று கூறும் போது, இந்த ஜனாதிபதியவர்கள் இந்த நாட்டு மக்களினால் நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையே பிரதமராக நியமித்திருக்கின்றார். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பது என்னவென்றால், சர்வதேச அழுத்தங்கள் ஜனாதிபதிக்கு இருந்திருக்கலாம், அதற்கும் மேலாக தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும், ராஜபக்ச சகோதரர்களையும் காப்பாற்றக்கூடியவராக இவரைச் சிந்தித்து நியமித்திருக்கின்றார்கள். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியிருக்கின்ற எதிர்க்கட்சியை உடைப்பதற்காக இருக்கலாம்.

எனவேஇந்த காலிமுகத்திடல் போராட்ட விடயத்தில் வடக்கு கிழக்கிலுள்ள எங்களது இளைஞர்களை பங்குபற்ற வேண்டாமென்று கூறியிருந்தோம். அதற்கான காரணம் இன்று நிதர்சனமாகியிருக்;கின்றது. எங்களுக்குள்ளிருந்த சில மக்கள் பிரதிநிதிகள் வடக்குக் கிழக்கு இளைஞர்கள் இதில் பங்குபற்ற வேண்டுமென்று அறைகூவல் விடுத்திருந்தார்கள். கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையானது காலிமுகத்திடல் போராட்டத்தில் வடக்கு கிழக்கு இளைஞர்கள் பங்குபற்றியிருந்தால் வேறு விதமாக மாற்றப்பட்டிருக்கலாம். ஒரு இனக்கலவரமாகக் கூட மாற்றப்பட்டிருக்கலாம். 1983இல், நடந்த கறுப்பு ஜுலை போன்று, கறுப்பு மே என்ற ஒன்று மீண்டும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஏற்கனவே எங்கள் முள்ளிவாய்க்கால் அவலம் எங்களுக்கு ஒரு கறுப்பு மேமாதமாக இருக்கின்றது. அதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை நாங்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டதனால் தவிர்த்திருக்கின்றோம்.

எதிர்வரும் வாரத்தில் இந்த பிரதமர் தனக்குரிய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டி வரும். ஓன்றுக்கு மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் களமிறங்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. இந்த விடயத்தில் தமிழ் பரப்பிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்;, நான் உட்பட மிகவும் நிதானமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பது என்னுடைய அவா.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம். இருந்தும் தற்போதைய மாற்றத்தின் மூலம் ஏற்படும் அமைச்சரவையில் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுத் திட்டங்கள் இல்லாத எந்தவொரு அமைச்சரவையிலும் தமிழ்த் தேசியப் பரப்பில்; இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது, பங்கேற்கவும் மாட்டார்கள்.

ஏனெனில் 1965ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஆட்சியிலே அப்போதைய தமிழரசுக் கட்சி பங்குபற்றி அமைச்சுப் பதவியையும் பெற்றது. அந்த நேரத்தில் அப்போதைய அரசு கூட தமிழர்களுக்கான ஒரு தீர்வைக் கொடுக்கவில்லை. குறிப்பாக திருகோணமலை கோணேஸ்வரத்தைப் புனித பூமியாக்குவதற்கே சிங்கள அரசு தடையேற்படுத்தியது. அந்த ஒரு பிரச்சனையில் அரசை விட்டு வெளியேறியது.

இன்றும் கூட கோட்டா கோ கோம் போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ, புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ, ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்ற போதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் இவர்கள் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை தற்போது அமையப் போகும் அரசிலும் இவர்கள் சிந்திப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

ஏனெனில் இதே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் பிரதமாராக இருந்தார் 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் இதே ரணிலை பாதுகாத்தார்கள். மீண்டும் அவ்வாறான நிலைக்கு செல்வார்கள் என்று கருதவில்லை.

ஏனெனில் சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்று சொல்லுவார்கள். எமது தமிழ் தலைமைகள் பல தடவைகள் சூடு கண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பங்கரைக்கே சென்றுள்ளனர். இனிமேலும் அவர்கள் செல்வார்களானால் இன்று கோட்டா கோ கோம் போராட்டத்தினை முன்னெடுப்பது போன்று எமது மக்கள் எங்களுக்கு எதிராக கோ கோம் என்று கூச்சலிடுவதற்கான வழியை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அந்த நிலைமையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று தெரிவித்தார்.