ஜனாதிபதி முறைமையை ஒழித்து இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர்

இந்த வாரத்திற்குள், நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள, மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவர் பிரதமராகவும், புதிய அமைச்சரவையும் நியமிக்கவும் முடியுமென ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றிரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் அளித்து, 19 ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமுல்படுத்தும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அனைவருடனும் கலந்துரையாடி அதனை நோக்கி செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இந்த இக்கட்டான தருணத்தில் நாடு வீழ்ச்சியடையாமல், மக்களின் உயிரையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்தையும் வழங்குவதற்கும் அரசு இயந்திரத்தை தொடர்ந்து செயல்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களும் அமைதியாகவும் விவேகமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி மேலும் கோரியுள்ளார்.