அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் அலுவலகம்

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.