கிராம உத்தியோகத்தர்கள் சேவைப்பிரமாணம் கோரி கொழும்பில் நாளை ஒன்று கூடல்

கிராம உத்தியோகத்தர்கள் சேவைப்பிரமாணம் கோரி கொழும்பில்  நாளை (04) ஜனாதிபதி செயலகம் முன்பாக ஒன்றுகூட உள்ளனர்.

மிக நீண்ட காலமாக சேவையிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் தமக்கென இன்றுவரை சேவைப்பிரமாணம் இல்லாத நிலையில் முன்வைத்துள்ள கோரிக்கைகள்  நிறைவேற்றப்படாமலுள்ளமையாலும், 24 மணித்தியாலங்கள் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சம்பள படிநிலையிலிருந்து விடுவித்து தனியான ஒரு சேவையாக பேணுவதுடன் தமக்கு வழங்கப்படும் காகிதாதிகள், சைக்கிள், சீருடை போன்ற பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படாமலும் உள்ளமையால் அவற்றுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும் முன்வைத்து கொழும்பு ரயில்வே முன்பாக ஆரம்பித்து காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் வரை நடைபாதையாக சென்று ஜனாதிபதியின் செயலாளரிடம் மனுவொன்றினை கையளிக்க உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மு.கோமளேஸ்வரன்  குறிப்பிட்டார்.

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நடைபவனியில் நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ள உள்ளதுடன், கலந்து கொள்ள தவறுவோர் சுகயீன விடுமுறை அறிவித்து கடமையில் ஈடுபடாமல் தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.