மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கடமையாற்றிய 100ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் 100ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் இடமாற்ற கடிதங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  2021ம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கு அமைய இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான இடமாற்றக்கடிதங்கள் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நிருவாகத்தினர் உரிய ஆசிரியர்களிடம் கையளித்து வருகின்றனர்.
குறித்த வலயத்தில் கடமையாற்றி வேறுவலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்செல்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கே இவ்விடமாற்றக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 18.05.2022ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இவ்விடமாற்ற கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இடமாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையாக இவ்வலயத்திற்கு, வேறு வலயங்களில் இருந்து அல்லது புதிய நியமனங்கள் மூலமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படையும், எனவே போதுமான ஆசிரியர் வளம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி அமைப்புக்கள் விடுப்பதாக கூறினர்