மே 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார் போராடினாலும் மக்களுக்கு தேர்தலை வழங்குவதும் அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே யதார்த்தம் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் செய்தியாக மே 6ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தால் அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

இதேநேரம், தொழிற்சங்கப் பிரிவின்றி சுகாதார ஊழியர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மேலும் தெரிவித்தார்.