அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு மோடியும் தயாராகவே இருக்கின்றார்; அண்ணாமலை

(தலவாக்கலை பி.கேதீஸ்)

அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டின் தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் (1) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது

தமிழ் நாட்டிலிருந்து தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக மக்கள் தேவைப்பட்டபோது அங்கிருந்து உங்களுடைய முன்னோர்கள் அங்கிருந்து இராமேஸ்வரம் வந்து படகு, தோணி மற்றும் கப்பல் ஊடாக இலங்கைக்கு வந்து இங்கு குடியேறினார்கள். கிட்டத்தட்ட இன்று 150 ஆண்டுகள் கழிந்தும் கூட உங்களுடைய முன்னோர்கள் எப்படிப்பட்ட கனவிலே இங்கு வந்திருப்பார்கள் என்று யோசித்திருக்கின்றேன்.

உலகத்துக்கே அருந்த கூடிய ஒரு பானம் தேயிலை அதற்கு அச்சாணியாக அவர்கள் திகழ்கின்றார்கள். அங்கிருந்து வந்தவர்கள் இங்கு பெரிய தலைவர்களாகவும் படித்த மேதைகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பல்வேறு துறைகளில் பெருமையோடு சாதிக்கின்றார்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணக் கட்சி கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட அடையாளத்தை இன்னும் அக்கட்சி மறக்கவில்லை.

தொழிலாளர்களை மையப்படுத்தியே அது பயணிக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருமையோடு இந்த மண்ணிலே இருக்கின்றது என்றார் இந்த கட்சியை உருவாக்கியவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது.

சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையர்களுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளார். பேசமுடியாது கட்டுப்பட்டு நடக்க வேண்டும் உரிமை கிடையாது என்று சொன்னபொழுது இங்கு வந்து உரிமையை பறித்து முதல் பாராளுமன்ற தேர்தலில் 96 பாராளுமன்ற உறுப்பிளர்களில் 8 பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக பெற்று பாராளுமன்றம் நாடாளுமன்றம் சென்றனர்.

அதன்பின்னர் 1948 ஆம் ஆண்டு ஒரே நாளில் ஒரே ஒரு கையெழுத்தில் குடியுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பறிக்கப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்டபொழுது அதை எதிர்த்து குரல் கொடுத்து மறுபடியும் உரிமைகளை பெற்றுக்கொடுத்தார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுத்த கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். 1939 ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசாக ஆரம்பிக்கப்பட்டு 1950 ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாற்றம்பெற்றது.

இன்று 72 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்வி எழும்போது ஒரு தொழிலாளியின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் உங்களுடைய ஒரு சொந்தத்தை கொடுப்பதற்காகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. அமரர் ஆறுமுகன் தொண்டமானும் மக்களுக்காகவே அரசியல் செய்துள்ளார். 72 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் கூட பார்க்கும்போது எண்ணத்திலிருந்து ஒரு துளி கூட மாறாமல் இருக்கின்றது.

சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் சிறந்த ஆளுமைமிக்க துணிச்சலான தலைவராக திகழ்ந்தார். அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவரை இழந்து நாம் தவிக்கின்றோம். அவர் தனது மக்களின் நில உரிமைக்காக போராடியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய வல்லரசு நாடாக மாறியுள்ளது.

இரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்த பெருமை இந்திய பிரதமர் நரேந்திரமோடியையே சாரும். அந்தவகையில் இலங்கையை அருகிலுள்ள நாடு.எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என்றார்.