(தலவாக்கலை பி.கேதீஸ்)
அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் நான்கு கோரிக்கைகைளை முன்வைத்துள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்;பட்டுள்ளதாவது
அதிபர், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு, பாடசாலை சீருடையில் செல்லும் மாணவர்களுக்கு அரைவாசி பேருந்து கட்டணம் அறவீடு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய காலத்தில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பஸ்கட்டண அதிகரிப்பை கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணத்தை தமது சம்பள பணத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
தற்போது சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் வாழ்வாதாரத்திலும் பாரிய பின்னடைவையும் எதிர் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வினால் மாணவர்கள் தினமும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சிக்கி தவிப்பதை தெளிவாக அறியமுடிகிறது.
எனவே பாடசாலைக்கு பஸ் ஊடாக பயணிக்கும் மாணவர்களின் நலன் கருதி தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் அரைவாசி கட்டணத்தை அறவிட அரசு பரிந்துரைக்க வேண்டும். மேலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இவ்விடயத்தில் கருணை அடிப்படையில் செயற்பட முன் வர வேண்டும்.
அரசாங்க பேருந்து சேவையில் இந்த நடைமுறையை உடனடியாக அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்றார். மக்களின் வாழ்வாதார சுமையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.