ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், இன்றையதினம் (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்பதால், பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும், இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ.தீபன் திலீசன், நேற்று (24) தெரிவித்தார்.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது,

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இடைநிலை பிரிவுக்கான பரீட்சைகளை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம்.

எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில், மாற்றீடான எமது முன்மொழிவுகளை கல்வியமைச்சு நிராகரித்தமையின் விளைவாகவே அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக – தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவினையும் கணிசமாக பாதித்துள்ளன.

அத்துடன் தூர பிரதேசங்களிற்கு சென்று கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடிகளை மட்டுமல்ல குடும்பச் சுமைகளுடன் போக்குவரத்துச் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் கடமைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன. வரிசையில் நின்றே நாட்டுமக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

கஷ்ட அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், எரிபொருள் தட்டுப்பாடான இன்றைய சூழலிலும்விரலடையாள இயந்திர நடைமுறைகளால் தொழில் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமைகளைத் தாண்டி – எரிபொருள் பிரச்சினையால் கல்வித்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் – தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்களையும் – கற்கும் மாணவர்களையும் அருகில் உள்ள பாடசாலைக்கு செல்லக் கூடிய செயற்பாடுகளை செய்து தருமாறும். அல்லது மாற்று திட்டங்களை வழங்குமாறும் கல்வியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி இருந்தோம்.

எனவே, இவற்றுக்கான உடனடித் தீர்வை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்வதுடன் அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து அதிபர் ஆசிரியர்களும் ஒற்றுமையுடன் இன்று (24) நடைபெறும் சுகயீன லீவு போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.எ.எஸ்.நாதன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து சுகயீன போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எரிபொருள் விலையேற்றத்தால் ஆசிரியர்கள்,அதிபர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். இதனால் தூர இடங்களுக்கு சென்று பணிபுரியும் ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு கடமையாற்றக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த அரசாங்கம் மக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்த்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.