அரசாங்கத்திற்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஒரு குற்றப்பிரேரணை தீர்மானமும், 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கத்திற்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஒரு குற்றப்பிரேரணை தீர்மானமும் கொண்டுவரப்படும் எனவும், 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டுக்கு பாதகமான பிரேரணைகள் வரும் போதெல்லாம் அவற்றைத் தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தது எனவும், ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது அதை முறியடிக்க சட்ட ரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டு அதனை தோற்கடிக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும், மேலும் பிற வேறு சந்தர்ப்பங்களில் நாட்டிற்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தருணத்திலும் கூட வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் இதயத் துடிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்ந்து நாட்டிற்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று அன்மையில் கொழும்பில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சமகால அரசியல் நெருக்கடி மற்றும் இது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.