நாடு மரண விளிம்பில்;  அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.இரு வருடங்களுக்கு முன்னர் இருந்து குட்டையில் மீன் பிடித்தது யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இன்று (19) காலை நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டுக்கு செய்த அழிவு நம் நாட்டில் உள்ள இருநூற்று இருபது இலட்சம் மக்களை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்ற ஒரு குற்றச் செயல் எனவும், இதற்கு முழு அரசாங்கமும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதனால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை மேலே பார்த்துக் கொண்டிருந்த அரசாங்கம் இன்று சர்வதேசத்தைப் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது எனவும், இரண்டு வருடங்களாக செய்யாததை இன்று செய்வது கேலிக்கூத்தானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உற்ற நண்பர்களுக்கும்,கோடீஸ்வரர்களுக்கும் வரிச்சலுகை வழங்கி,நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றது தற்போதைய அரசாங்கமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்ச அரசாங்கம் இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தார்.

தற்காலிக தீர்வுகளிலிருந்து அரசியலமைப்பை மாற்றுவதற்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் இருந்து அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதை விடுத்த வேறு எந்தவொரு திருத்தத்தையும் எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.