வெற்றுப்பானை

(படுவான் பாலகன்)

சமநிலையில் ஓடிய கால்கள் சடுதியாய் ஓட மறுக்கிறது. எழுந்து நின்று மிதிக்கின்றேன். சாடையாய் நகர்கிறது. அவ்வாறே மிதிக்கின்றேன். வேகம் இன்னமும் குறைகிறது. மெதுவாக நிலத்திலே கால்களை ஊன்றி கொள்ளிக்கட்டுக்களை பிடித்தவாறு கீழிறங்கி, அழுத்தம் அதிகம் கொடுத்து தள்ளுகின்றேன். அணிந்திருந்த ஆடையையும் மீறி மழை நனைத்தால் போல் உப்பு உறைப்புடன் நீர் வடிந்தோடுகின்றது. வாகனங்கள் செல்கின்றன. நிறுத்தி யாரும் எதுவும் கேட்கவில்லை.

“ மேட்டில் ஏறினால் சரி, சிறிது தூரம்தான் உள்ளது”

மெதுமெதுவாக தள்ளி மேட்டில் ஏறிவிட்டேன். அச்சந்தோசத்தில் சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு சைக்கிளில் கொழுவியிருந்த பையை தூக்கி வீதியின் ஓரத்தில் அமர்ந்து கொள்கின்றேன். மூச்சும் வேகமாய் வந்து கொண்டிருக்கின்றது. உடலும் சோர்வாய் இருக்கின்றது. தண்ணீர் போத்தலை எடுத்து வாயைக் கொப்பளித்துக் கொள்கின்றேன். கடதாசியை விரித்து வெற்றிலை,பாக்கை வாயில் போட்டுக்கொண்டிருக்கின்றேன்.

மோட்டர் சைக்கிளில் பிள்ளைகளையை ஏற்றிக்கொண்டு ஆணும், பெண்ணுமாக சென்று கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளின் முகங்களில் புன்முறுவல் தெரிகிறது.

“இதே சைக்கிளில்தானே போறீங்க, வாறீங்க. எங்களை எப்ப அப்பா மோட்டார் சைக்கிளில் ஏற்றி போகப்போறீங்க”
இது வீரபத்திரனின் மகளின் குரல். இரவு கொள்ளி கட்டிக்கொண்டிருக்கும் போது அவனின்; மகள் அவனைப் பார்த்துக் கேட்டது. அப்போது அவன், மகள் பேசியதை பெரிதுபடுத்தவில்லை.

“ஏற்றிப்போறனே”

என்று சொல்லிவிட்டு கொள்ளிகளை துண்டம் துண்டமாக வெட்டி அவற்றினை அடுக்கி கட்டும் வேலையை செய்து கொண்டிருந்தான். பிள்ளையும் அவ்வாறு கேட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

தனது மகள் கேட்டதை அவன் மறந்துவிடவில்லை. அவளின் மனைவியுடனும் இதுபற்றி பேசவில்லை. இரவுமுழுவதுமே மகளின் வார்த்தை தொடர்பிலே நினைத்துக்கொண்டிருக்கின்றான். புரண்டு புரண்டு படுத்த அவனுக்கு இரவு நித்திரையும் வரவில்லை. அடிக்கடி எழுந்து எழுந்து நேரத்தையும், வாசலையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

அதிகாலை பொழுது புலர ஆரம்பிக்க, சேவல் கூவ ஆரம்பித்தது. வேகவேகமாக எழுந்து, காலைக்கடன்களை முடித்துவிட்டு, இருபுறமும், மேலுமாக கொள்ளிகளைக் கட்டி வைத்திருந்த சைக்கிளை வாசலின் முன்னுப்புறம் நிறுத்தி விட்டு சைக்கிளின் கைபிடியில் பையொன்றினை தொங்கவிட்டு, மனைவி சைக்கிளை வீதிவரையும் தள்ளிக்கொண்டு விட, ஏறி மிதித்து வந்துவிட்டான்.

“பதினெட்டு வருடங்களாய் சைக்கிளும், கொள்ளியுமாய் வாழ்கிறமே. எதையுமே மிச்சம்பிடிக்க முடியிதில்லையே. நேற்றுதான் ஆரம்பித்த தொழில் போன்று இருக்கிறது. வருடங்கள் 18ஐ கடந்து சென்றுவிட்டதே.” என்று புலம்பிக்கொண்டிருக்கும் போதே இவனைக்குறுக்கறுத்து ஒரு துவிச்சக்கரவண்டி கூட செல்லவில்லை. மோட்டார் சைக்கிளும், வேறு வாகனங்களுமே செல்கிறன.
அவனும் மோட்டார் சைக்கிள் வாங்கி வருகின்றான். பிள்ளைகளின் முகத்தில் என்றும் இல்லாதவாறான சந்தோசம். மோட்டார்சைக்கிளை தொடுவதும், ஏறுவதுமாக இருக்கின்றனர். மனைவியும் தொட்டுப்பார்க்கின்றாள். பூரிப்பு அடைகிறாள். பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ஊரையைச் சுற்றி வலம் வருகின்றான். பிள்ளைகளும் கைகளை அசைத்து கூக்குரல் எழுப்புகின்றனர். அவன் எப்போதுமே பார்க்காத சந்தோசத்தினை இரு பிள்ளைகளின் முகங்களிலும் காண்கின்றான். அவனது முகத்திலும் என்றுமில்லாத சந்தோசம். மனமிட்டு சிரிக்கின்றான்.
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த கமலன் கோனை சத்தமாக அழுத்திப்பிடிக்கின்றான். அப்போதுதான் தீடிரென தலையை உசுப்பி நிமிர்ந்து பார்க்கின்றான்.

“கொள்ளிச்சைக்கிளை வைத்துவிட்டு தனிமையில் இருந்து ஏன் சிரிக்கிறாய்?” என்று கணபதிப்பிள்ளை கேட்கத்தான்,
“ நான் பகல் கனவு கண்டிருக்கின்றேன்” என்று நினைத்தவனாய் “ஒன்றுமில்லை” என்று மௌனமாய் பதிலை கூறிக்கொண்டு பையை சைக்கிளில் கொழுவியபடியே மெதுவாக பயணிக்கின்றான்.

அதிகாலையில் எழுந்து காடுகளுக்கு சென்று காய்ந்த கம்பு, தடிகளை எடுத்து அளவளவாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவதும், பள்ளம், குழிகளை கடந்து ஓடுவதும், கொண்டுசென்ற சாப்பாட்டினை அவிழ்த்து உண்பதனையும் நினைத்துக்கொள்கின்றான். அன்றொரு நாள் அதிகாலையிலேயே லைட் ஒன்றினைப்பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓடியபோது, வீதியின் ஓரத்தில் இருந்த பற்றைக்குள் யானை நின்றுள்ளது. தீடிரென வீதிக்கு வர சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடியது. அப்போது சைக்கிளை காலால் யானை மிதித்தது. அவனைத் துரத்தியது. அதிலிருந்;து தப்பியது. ஓடிய போது மரக்கட்டையில் தடக்கி விழுந்;தது அவன் கண்முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஓடிய போது காலில் அடிகட்டை குத்தி பெரிய காயம் ஏற்பட்டபோதும், உயிர் பிழைத்த அந்த சம்பவத்தினை எண்ணிக்கொண்டே சைக்கிள் செலுத்திய அவனுக்கு, உடல் பலமிழுந்தவனாய் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“காலில் ஏற்பட்ட காயத்தினாலும், சைக்கிள் உடைந்தமையினாலும் ஒரு மாதம் வேலையொன்றும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தேன். மனைவியும் தூர இடங்களுக்கு கூலிவேலைக்குச் சென்று, அதில் கிடைத்த வருமானத்தினைக் கொண்டு வாழ்க்கைச் செலவை ஓரளவு சமாளித்தோம். கால் காயம் காய்ந்து ஒருவாரம்தான். இரண்டு நாளாகத்தான் வேலைக்குச் செல்கின்றேன்.”
தீடிரென முன்னால் அதிக தடவை கோனை அழுத்தியபடி வாகனம் ஒன்று சத்தமிட்டது. அப்போதுதான் வீரபத்திரனின் சிந்தனையும் கலைந்தது. முன்னால் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்துவிட்டான்.

வீதியில் கிடந்த கல்கள் குற்றியதினால் முழுங்கால், முழங்கைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனைப் பொருட்படுத்தாது. எழுந்து சைக்கிளைப் பார்க்கின்றான். சைக்கிளுக்கு சேதங்கள் ஒன்றுமில்லை. அவன் அருகில் பலரும் கூடிவிட்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லுகின்றனர். அவன் மோதிய கார் வாகனத்திற்கும் சேதம் இல்லை.

“வீதியைப் பார்த்து ஓடத்தெரியாதா?”
என கோபத்துடன் கீழிறங்கியபடி கார்க்காரன் காரினைப்பார்த்தான். காரில் சிறிய சிறிய கீறல்கள் விழுந்திருந்தன. அப்போது இன்னும் கோபத்துடன் திட்டினான்.
பக்கத்தில் இருந்த ஒருவர் “உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லைதானே? காரில்தானே கீறல்கள் பட்டிருக்கின்றது.” என்று கூறியதும் இன்னும் அதிகமாக பேச ஆரம்பித்தான்.
வீரபத்திரன் அணிந்திருந்த சாரணின் ஒரு பக்கத்தில் கிழிபட்டிருந்தது. சேட்டும் கிழிந்திருந்தது. அதனை மறைத்துக்கொண்டு கைகள் இரண்டையும் கூப்பிக்கொண்டு,

“என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், நான் செய்தது தவறுதான், என்னிடம் தருவதற்கு ஒன்றுமில்லை இதுமட்டும்தான் என்னிடம் உள்ளது” என்று சைக்கிளைக் காட்டினான்.
அருகில் இருந்தவர்கள்

“என்ன மனிசன் இவன் அந்த பெடியன் எவ்வளவு அடிபட்டு காயமும் ஏற்பட்டிருக்கின்றது. அவன்ட வறுமையில் கொள்ளி விற்கின்றான். அவனுக்கு என்னமும் நடந்திருந்தால் அக் குடும்பத்தின் நிலை என்ன? இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கதைக்கிறானே? என்று பேசியது அவனுக்கு கேட்டதும் கார்க்காரன் காரில் ஏறிக்கொண்டு போய்விட்டான்.

வீரபத்திரனும் சைக்கிளை எடுத்து கொள்ளிக்கட்டுக்களை சரிசெய்து விற்பதற்கு கூவ ஆரம்பித்து எல்லாவற்றையும் விற்றுமுடிவதற்கு மூன்று மணியை கடந்துவிட்டது.
மனைவி கூறிய பொருட்களை வாங்குவதற்கு கடைக்குச் சென்றான். அங்கு எல்லாவற்றையும் வாங்கமுடியவில்லை. குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே வாங்கிக்கொண்டு வீட்டினை நோக்கிப் புறப்பட்டான். தனது கணவனை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தாள் வீரபத்திரனின் மனைவி சங்கவி. பாத்திரங்கள் எல்லாவற்றையும் கழுவி வைத்துவிட்டு, வெளியில் வருகைதந்து எட்டிப்பார்ப்பதும் உள்போவதுமாக இருந்தாள். பிள்ளைகள் இருவரும் சாப்பாடு கேட்டுக்கேட்டு கத்திக்கொண்டு தூக்கியே விட்டனர்.

“ஏன் இவ்வளவு நேரம், இந்நேரம் வந்திடுவாரே” என முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றாள்.

வீரபத்திரனும் கைகளில் வடியும் இரத்தத்தினையும் தேய்த்துக்கொண்டே வருகின்றான். வீடுநெருங்குவதற்கு முன்னர்தான் அவள் மனைவி அரிசி வாங்கி வரச்சொன்னது அவனது ஞாபகத்திற்கு வருகிறது. மீண்டும், மீண்டும் அவள் அரிசி வாங்கி வருமாறு அழுத்திக் கூறினாள். இவனும் வலியினாலும், வீட்டிற்கு வருகைதர வேண்டும் என்ற அவசரத்திலும், சாப்பாட்டிற்கான கறிவகைகளை வாங்கியவன் அரிசியை வாங்குவதற்கு மறந்துவிட்டான். வாங்குவதற்கும் அவனிடம் காசியில்லை. என்னசெய்வதென்று தெரியாமலே வளவின் கதவினைத் திறக்கின்றான். நிலத்தில் கால் வைத்த போது கால்கள் சுட ஆரம்பித்தது. அப்போதுதான் தான் செருப்பும் இல்லாமல் வந்திருப்பதை அவதானிக்கின்றான். மனைவியும் சைக்கிளில் இருந்த பொருட்களை எடுக்கின்றாள். அரிசியைக் காணவில்லை. எங்கு என்று கேட்கும் முன்னேமே அவனின் முகபாவனையில் புரிந்துகொண்டாள். சோறு சமைப்பதற்கு தயார்படுத்தியிருந்த பானையை பார்த்தாள் வெற்றுப்பானையாகவே இருந்தது. தூணிலே சாய்ந்து கொண்டாள். வீரபத்திரனும் காயங்களை மறைத்துக்கொண்டு விறகோராய் அமர்ந்துகொண்டான்.